சிறப்புச் செய்தி: சதானந்தன், சென்னை
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில்
12 கோடி பேர் வேலையிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இது அதிகாரப்பூர்வத் தகவல் இல்லையென்றாலும், இந்தியாவின் வேலையின்மை விகிதம் இப்போது மிக உயர்ந்த அளவில் 27.1% ஆக உள்ளது என்று இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையமான (சிஎம்இஇ) என்ற தனியார் அமைப்பின் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தியாவின் வேலையின்மை புள்ளிவிவரம், அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகம் என்றும் அத் தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
கோவிட் -19 நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்காக மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு நிலை அமல்படுத்தப்பட்டது. இதனால் வெகுஜன பணி நீக்கங்கள் மற்றும் அதிக வேலை இழப்புகள் ஏற்பட்டன. இந்தியாவில் தற்போது (மே 18) வரை 1 லட்சம் பேர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய்த் தொற்றினை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகளால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாமல் அவ்வப்போது நிலைமைகளுக்கு ஏற்பட நிலைப்பாடுகளை மேற்கொண்டன. இதனால் நாட்டில் 95 சதவீதமான மக்கள் வீடுகளில் முடங்க நேர்ந்தது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து அனைத்தும் நிறுத்தப்பட்டன. முடக்கப்பட்டன.
இதனால் அவநம்பிக்கைக்கு உள்ளான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குறிப்பாக தினசரி கூலிகள், தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்புவதற்காக நகரங்களில் இருந்து கால்நடையாக தப்பிச் செல்ல முயன்றனர். முறைசாரா வேலைகளில் ஈடுபட்டிருந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிட்டது.

அதேநேரத்தில் அவ்வப்போது நீடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் வணிக மையங்களை தொடர்ந்து மூடுவது, ஊரடங்கு எப்போது முடிவடையும் என்ற நிச்சயமற்ற தன்மை ஆகிய பல காரணிகளால் முறையான மற்றும் நிரந்தர வேலைவாய்ப்புகளும் பறிபோகத் தொடங்கின.
இந்த நிலையில் கடும் நிதி நெருக்கடி, பொருளாதார இழப்பு காரணமாக பல்வேறு துறைகளில் உள்ள பெரிய நிறுவனங்கள், குறிப்பாக ஊடகங்கள், விமானப் போக்குவரத்து, சில்லறை விற்பனையகங்கள், விருந்தோம்பல், சுற்றுலா போன்ற பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு மாத ஊதியம் தர இயலாமல் பணி நீக்கங்களை அதிரடியாக அறிவித்தன.
மார்ச் மாத தொடக்கத்தில் 8.7 சதவீதமாக இருந்த வேலையின்மை ஏப்ரல் மாதத்தில் 23.5 சதவீதமாக உயர்ந்துவிட்டது. CMIE இன் தரவை உற்று நோக்கினால், இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஊரடங்கு மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தியதைக் காண முடிகிறது என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வேலை இழந்த 12.20 கோடி பேரில், 9.10 கோடி பேர் சிறு வணிகர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள். அதேநேரத்தில் கணிசமான எண்ணிக்கையிலான சம்பளத் தொழிலாளர்கள் 1.30 கோடி மற்றும் சுயதொழில் செய்பவர்கள் 1.80 கோடி பேரும் வேலையை இழந்துள்ளனர்.
மேலும், இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய கேந்திரமாக விளங்கும் வேளாண்மைத் துறை மட்டுமே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொழிலாளர்களுக்கு கைகொடுத்தது. CMIE இன் படி, தினசரி ஊதியம் பெறுபவர்கள் நெருக்கடி காலங்களில் விவசாயத்திற்கு திரும்பினாலும் அது அவர்களுக்கு போதுமானதாக இல்லை என்று அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
தற்போது குறைந்த எண்ணிக்கையில் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ள சில மாவட்டங்களில் மட்டும் அரசுகள் சில கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளது, அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நோய்த் தொற்றுகளை கொண்ட மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. கட்டுப்பாடு தளர்வு ஒரு நல்ல அறிகுறி. ஆனால் இது அதிகம் உதவ முடியாது” என்கிறார் சிஎம்ஐஇ அமைப்பின் தலைவர் வியாஸ்.
மேலும் இந்தியாவில் கொரோனா அதிகமாகி வருவதால் பொருளாதாரத்தில் மேலும் கடுமையான தாக்கங்கள் ஏற்படும். தனிநபரின் சராசரி வருவாய் குறையும். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சரிவுக்கு வழிவகுக்கும். நாட்டில் வரும் மாதங்களில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 17 கோடியாக அதிகரிக்கும். மேலும் இந்தியா தற்போது மேற்கொண்டு வரும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் மேலும் பின்னடவைச் சந்திக்கும் என்று சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆர்தர் டி லிட்டில் எச்சரிக்கிறது.
தற்போதைய சூழலில் இதை மீட்டெடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த இந்த நிறுவனம், ரூ. 350 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரம் என்ற இலக்கை அடைய அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களுடன் கூடிய அணுகுமுறையை இந்தியா கையாள வேண்டும் என்கிறது அது.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி அறிவித்துள்ள சுயசார்ப்பு இந்தியா திட்டம் நல்ல தொடக்கமாக உள்ளது. எனினும் உறுதியான அணுகுமுறையை இந்திய அரசு கையாள வேண்டியுள்ளது என்றும் ஆர்தர் டி லி்ட்டில் தெரிவிக்கிறது.