
கொரோனாவுக்கு அடுத்து இப்போது இந்தியாவை பெரிதும் அச்சுறுத்தி வருபவை, வெட்டுக்கிளிகள் கூட்டம். இவற்றினால், கர்நாடகா உள்ளிட்ட மேலும் 12 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
வெட்டுகிளிகள் பெரிய அளவில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றன. இவை, விளைச்சலுக்கு நிற்கும் பயிர்களை உண்டு, விவசாயிகளை பெரிதும் துயரத்தில் ஆழ்த்துகின்றன. பல ஆண்டுகளாகவே வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அவ்வப்போது நடைபெற்றுதான் வருகிறது. மத்திய ஆசிய நாடுகளான ஈரான் உள்ளிட்ட பாலைவன நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 கிமீ., தொலைவுக்கு பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.
இந்த பாலைவன வெட்டுக் கிளிகள் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் என இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் படையெடுத்து உணவுப் பயிர்களையும் தாவர இனங்களையும் நாசம் செய்து வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இப்போது விவசாயிகளுக்கு பெரும் வேதனையை அளித்து வருகிறது.

இதை அடுத்து, வெட்டுக்கிளி களை கட்டுப் படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவவும் மத்திய வேளாண் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. வெட்டுக் கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.
இந்தப் பணிக்காக 89 தீயணைப்பு படைகள், 120 கண்காணிப்பு சாதனங்கள், ஸ்பிரே சாதனத்துடன் கூடிய 47 கட்டுப்பாட்டு வாகனங்கள் மற்றும் 810 டிராக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

வட மாநிலங்களைக் கடந்து, கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களிலும், உத்தராகண்ட், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், தில்லி உள்பட மேலும் 12 மாநிலங்களிலும் வெட்டுக்கிளிகளின் தாக்கம் இருக்கும் என்று மத்திய விவசாய அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது.
ஜூன் 15-ஆம் தேதிக்குப் பின்னர் இந்த மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இந்த மாநிலங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது மத்திய விவசாய அமைச்சகம்!

இதனிடையே, வெட்டுக்கிளிகள் தாக்கும் என்று இந்த வருடம் பஞ்சாங்கத்தில் முன்னமேயே கணித்துக் கூறப் பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகின்றனர் சமூகத் தளங்களில்!
இந்த வருட பஞ்சாங்கங்களில் தெரிவிக்கப் பட்ட தகவல்கள்…. வெட்டுக் கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து கோதுமை பயிர்களை நாசம் செய்யும் என்றும் அடிக்கடி வெடிச்சத்தம் ஏற்பட்ட வண்ணம் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது

இன்னொரு பஞ்சாங்கத்தில் இவ்வாண்டு வெட்டுக்கிளி பூச்சிகள் ரீங்காரம் செய்தலும் தவளைகள் கத்துதலும் செங்கல்சூளை நன்றாக நடப்பதும் மருத்துவர்களுக்கு அடிக்கடி ஊக்கத்தொகை கிடைப்பதும் நல்ல யோக பலனும் வானத்தில் ஒரு புதிய நட்சத்திரம் ஆடி மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமை கிழக்கில் உதயமாகி மறைதலும் இதனால் மின்காந்த அலை பாதித்து வான்வழி போக்குவரத்து ஒரு பிரச்சனை உண்டாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இன்னொரு பஞ்சாங்கத்தில் வெட்டுக்கிளி பூச்சிகளால் கடும் பாதிப்பு ஏற்படும் நஞ்சை புஞ்சை செழிப்படையும் இந்த சார்வரி ஆண்டு என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது