
நாளை முதல் பெட்ரோல் விலை நிர்ணயம் தினசரிக்கு மாறுகிறது. நாள்தோறும் காலை 6 மணிக்கு பெட்ரோல் விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது மாதந்தோறும் இரண்டு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. மாதத்தின் முதல் நாள் மற்றும் 16-ம் தேதி வாக்கில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இதனையடுத்து, இந்த நடைமுறையை மாற்றி நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை ஜூன் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிப்புக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் ஜூன் 16-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். ஜூன் 16-ம் தேதி முதல் பெட்ரோல் வாங்கவோ, விற்கவோ மாட்டோம் என்று அறிவித்தனர் இதனிடையே, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அப்போது, நள்ளிரவு 12 மணிக்கு பதிலாக காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்று மத்திய அரசு ஒப்புக் கொண்டதை அடுத்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தினசரி விலை நிர்ணய முறை ஏற்கனவே 5 நகரங்களில் மே ஒன்றாம் தேதி முதல் நடைமுறையில் உள்ளதாகவும், தற்போது அது விரிவாக்கம் மட்டுமே செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



