ஆட்சிக்கு வந்து 50 நாட்களில் ஆம் ஆத்மி., வி.ஐ.பி., ஆகிவிட்டனர்: அஜய் மக்கான்

aap-delhi-car-parkingபுதுதில்லி: ஆட்சிக்கு வந்து 50 நாட்களிலேயே ஏழைகளின் கட்சி எனப்படும் ஆம் ஆத்மி கட்சி, வி.ஐ.பி., கட்சியாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் கூறியுள்ளார். தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிரான புதிய உதவி எண்ணை அறிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. தில்லி தல்கடோரா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் துணை முதல்வருமான மனீஷ் சிஷோடியா உள்ளிட்ட தலைவர்கள், தங்களது கார்களை விஐபி., விவிஐபி பார்க்கிங்களில் நிறுத்தியிருந்தனர். இதற்கு, ஆம் ஆத்மியினரிடையே விஐபி கலாச்சாரம் உருவாகியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு படங்களை வெளியிட்டுள்ளார். அதில், ஊழலுக்கு எதிரான உதவி எண் அறிவிக்கும் மாநாடு நடைபெறும் தல்கடோரா மைதானத்துக்கு வெளியே, விஐபி பார்க்கிங், விவிஐபி பார்க்கிங் பகுதிகள் என பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 நாட்களில் ஆம் ஆத்மி கட்சி விஐபி; விவிஐபி கட்சியாக மாறிவிட்டது எப்படி என்று கூறியுள்ளார். விஐபி கலாச்சாரத்தை இப்போது உருவாக்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியினர், முன்பு எங்களை இப்படி பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இதே கட்சிதான் விஐபி கலாச்சாரத்துக்கு நாங்கள் முற்றுப் புள்ளிவைப்போம் என்று கூறியது. தற்போது அவர்களே நுழைவுப் பகுதிகளில் விஐபிகள் செல்லும் இடம் என்று பலகைகள் வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் அஜய் மக்கான்.