பாஜக., குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்: வாழ்க்கைக் குறிப்பு

Published:

புது தில்லி:

வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் தே.ஜ.கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த். இவர், 12 ஆண்டுகள் எம்.பி.யாக பதவி வகித்தவர்.

1945 அக்டோபர் 1ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம், தேராபூர் தாலுகா பராங்க் கிராமத்தில் ஹரிஜனக்(தலித்) குடும்பத்தில் பிறந்தார். பள்ளி, கல்லூரி நாட்களில் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காகக் குரல் எழுப்பியவர். இது தொடர்பான போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டவர். அவரது தொய்வற்ற போராட்டங்களினால், ’நலிவடைந்தோரின் காப்பாளர்’ என்றே அவரை இங்குள்ளவர்கள் அழைத்தனர்.

கான்பூர் பல்கலைக்கழகத்தில் பி.காம்., எல்.எல்.பி.(வக்கீல்) பட்டம் பெற்றவர். 1971ல் தில்லி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். இதனிடையே சிவில் சர்வீஸ் தேர்வில் 3வது முறையாக எழுதி தேர்ச்சி பெற்றார்.

1977ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1980 முதல் 1993 வரை மத்திய அரசின் வழக்குரைஞராக உச்ச நீதிமன்றத்தில் பணி புரிந்தார். எஸ்.சி., எஸ்.டி.யினர் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் நாடாளுமன்ற நிலைக்குழு உள்ளிட்ட பல நிலைக்குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

1977ல் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தொழிலாளர் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு சில கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தபோது, அதை எதிர்த்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டார்.

லக்னோ டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாக வாரிய உறுப்பினர், கொல்கத்தா ஐ.ஐ.எம். நிறுவன அரசு நிர்வாகக் குழு உறுப்பினர் என பொறுப்புகளை வகித்தவர் இவர்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக, உத்தரப் பிரதேசத்தில் இருந்து தொடர்ச்சியாக இரு முறை 1994-2000 மற்றும் 2000-2006 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றினார். தன் எம்.பி. பதவி காலத்தில் உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் மாநில கிராமப்புற கல்வி வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார்.

தலித், பழங்குடியினர், நலிவடைந்தோர், பெண்களுக்கு தில்லி இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் சட்ட உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வரும் இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். தடாலடி அரசியலில் ஈடுபடாதவர். பா.ஜ.க., தலித் மோர்ச்சா அமைப்பு தலைவராக 1998 முதல் 2002ம் ஆண்டு வரை பணியாற்றியவர். அகில இந்திய கோலி சமாஜ் தலைவராகவும், பா.ஜ.க.,வின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் பதவி வகித்தவர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

2002ல் இந்திய பிரதிநிதியாக ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். எம்.பி.யாகப் பதவி வகித்த காலத்தில் தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்த், பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர். கடந்த 2015 ஆகஸ்டு 8ல் பீகார் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

71 வயதாகும் ராம்நாத் கோவிந்த்துடன் மனைவி சவீதா, மகன் பிரசாந்த் குமார், மகள் சுவாதி ஆகியோர் உள்ளனர்.

Related articles

Recent articles

spot_img