
கன்னட திரையுலகின் இளம் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, தமது 39ஆவது வயதில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவர், தமிழ் நடிகர் அர்ஜூனின் மருமகன். தமது சகோதரி மகன் சிரஞ்சீவியின் மரணத்தால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான அர்ஜுன், நேற்று நடைபெற்ற சிரஞ்சீவி சர்ஜாவின் இறுதிச் சடங்கில் மனம் உடைந்து அழுதார்.

நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி, நடிகை மேக்னாராஜ் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். அவர் தன் கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அவரது நிலை, மிகவும் பரிதாபகரமாக இருந்தது. நடிகை மேக்னாராஜை தேற்றுவதற்கு உறவினர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இளம் நடிகர், அதுவும் 39 வயதில் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தது, கன்னட திரையுலகத்தினரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
பெங்களூரின் கனகபுராவில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் நேற்று சிரஞ்சீவி சர்ஜாவின் உடல் அடக்கம் நடைபெற்றது. கன்னட நடிகர்கள் புனித்குமார், உபேந்திரா, சுதீப் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் சிரஞ்சீவி சர்ஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கொரோனா காரணமாக, சிரஞ்சீவி சர்ஜாவின் இறுதிச்சடங்கில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இறுதிச்சடங்கு நிகழ்ச்சி தொலைக்காட்சி மற்றும் யுடியூப் சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்து புகைப்படங்கள் பகிர்ந்து கொண்டனர்.