தில்லி நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் ஆஜர்

இந்தியா

புது தில்லி: தில்லி நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் அரவிந்த் கேஜ்ரிவால்! அவதூறு வழக்கில் தில்லி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நேரில் ஆஜரானார். அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது சுரேந்தர் ஷர்மா என்ற வழக்கறிஞர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதாக தில்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கேஜ்ரிவால், சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, பிற்பகல் 2 மணிக்குள் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று பிற்பகல் நீதிமன்றம் கூடியபோது அரவிந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, யோகேந்திரா யாதவ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான உத்தரவு வரும் மே மாதம் 2-ந் தேதி பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் மே 2 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.