
புது தில்லி:
ஹூரியத் தலைவர்கள், பாகிஸ்தானில் இருந்து மட்டுமல்ல, துபை மற்றும் லண்டனில் இருந்தும் நிதியுதவி பெற்று வருகின்றனர். இது, அண்மையில் கைது செய்யப்பட்ட பிரிவினைவாதி ஷாஹித் உல் இஸ்லாமிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி பிரிவினைவாதிகளான அல்டப் ஷா, அயாஸ் அக்பர், பீர் சைஃபுல்லா, மெஹராஜ் கல்வால், ஷாஹித் உல் இஸ்லாம், நியாம் கான் மற்றும் பிட்டா கராத்தே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிரிவினைவாதி ஷாஹித் உல் இஸ்லாமிடமிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் 150 பயங்கரவாதிகளின் பெயர்ப் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தப் பட்டியலின் படி, ஷாஹித் மிர்வைஸ் என்பவர், உமர் பரூக்கின் முக்கிய உதவியாளராக இருந்தவர். ஹுரியத் மாநாட்டின் மிதவாத பிரிவின் தலைவராகவும் , பிரிவினை வாத அமைப்பின் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டார். 1990களில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் ஆயுதப் பயிற்சி அளித்த நபர்களில் ஒருவர். பின்னாளில் அவர் மீண்டும் காஷ்மீர் வந்து, சில காலம் கழித்து ஹுரியத் மாநாட்டில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், ஷாகித் உல் இஸ்லாம் கூறிய தகவல்களின் படி, ஹூரியத் தலைவர்கள் பாகிஸ்தானில் மட்டுமல்லாமல், துபை மற்றும் லண்டனில் இருந்து நிதி உதவிகளைப் பெற்றுக் கொண்டுள்ளன. இதனை, விசாரணையின் போது ஷாஹித் கூறியதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்று ஆங்கில செய்தி சேனல் ஒன்றை மேற்கோள் காட்ட்டி செய்தி வெளியாகியுள்ளது.


