
புது தில்லி:
மாநிலங்களவையில் முதல் முறையாக பாஜக., அதிக உறுப்பினர்களை கொண்டு, காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து, மிகப்பெரும் கட்சி என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.
காங்கிரஸ், மாநிலங்களவையில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது இதுவே முதல்முறை. காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவி வருகிறது. இதுவே தற்போதைய நிலைக்குக் காரணம். அண்மைக் கால சட்டப் பேரவைத் தேர்தல்களில் அபார வெற்றி பெற்று வரும் மோடி – அமித்ஷா கூட்டணியால், மாநிலங்களவையில் முதன்மைக் கட்சி என்ற நிலையையும் பாஜக., எட்டிப் பிடித்துள்ளது.
தற்போது மாநிலங்களவையில் அதிக எம்.பி.க்களைக் கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக.,வின் உறுப்பினர் எண்ணிக்கை, வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும். பாஜக., ஆளும் மாநிலங்களில், வரும் காலத்தில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் கூடுதல் இடங்களை பாஜக., பெறும்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் பழங்குடியினத் தலைவர் சம்பாதியா உய்கி மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதையடுத்து பாஜக., எம்.பி.க்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. இது காங்கிரஸ் உறுப்பினர் எண்ணிக்கையை விட ஒன்று கூடுதல்.
2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக., பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றே வந்தது. பாஜக., வின் தே.ஜ.கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி என 18 மாநிலங்களில் ஆட்சி நடைபெறுகிறது. 29 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தற்போது 6 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. மத்தியில் வாஜ்பாய் அரசு இருந்தபோதுகூட பாஜக.,வுக்கு மாநிலங்களவையில் 50க்கும் குறைவான உறுப்பினர்களே இருந்தனர்.
பொதுவாக, இது வரை மாநிலங்களவையில் பாஜக., கூட்டணிக்கு போதிய பலம் இல்லாமல் இருந்ததால், எதிர்க் கட்சிகளின் உதவியுடனேயே மசோதாக்களை நிறைவேற்றி வந்தது. வரும் 2018 மத்தியில் இந்நிலை மாறும். 2018 ஏப்ரலில் மாநிலங்களவையில் 57 உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைகிறது. இதில், 10 உறுப்பினர்கள் உபி., மாநிலத்தில் இருந்து தேர்வானவர்கள். இப்போது உ.பி.யில் பாஜக., ஆட்சியில் உள்ளது. அங்கே பாஜக.,வே 8 அல்லது 9 உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்யும். மபி., ராஜஸ்தான், பீகார், அரியானா உள்பட பாஜக., ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுவதால், உறுப்பினர் எண்ணிக்கை அதிகம் வரும். மேலும், பீகாரின் ஐக்கிய ஜனதா தளமும் பாஜக., கூட்டணியில் இணைந்துவிட்டதால், மாநிலங்களவையில் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளையும் எதிர்கொள்ளும் பலத்தை பாஜக., பெறும்!


