
புது தில்லி:
‘லவ் ஜிகாத்’ வழக்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்தரன் தலைமையில் தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொள்ள, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது இந்த வழக்கில் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப் படுகிறது.
‘நம் நாட்டில் இந்துப் பெண்களை காதல் எனும் போர்வையில் வலைவீசி, அவர்களை முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் சதி நடக்கிறது (லவ் ஜிகாத்)’ என்று இந்து அமைப்புகள் புகார் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கே.எம்.அசோகன் என்பவரின் மகள் அகிலாவை ஷபின் ஜகான் என்பவர் மதம் மாற்றி திருமணம் செய்துள்ளார். அகிலாவை இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றி பின்னர் திருமணம் செய்துள்ளார் ஜகான். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணியமர்த்த பெண் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும், ஜகான் ஒரு கைக்கூலி என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இத்திருமணத்தை எதிர்த்து கேரள நீதிமன்றத்தில் அசோகன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் திருமணம் அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்ததில் சந்தேகங்கள் உள்ளன. இதில் ‘லவ் ஜிகாத்’ சதி இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று கூறியதுடன், அவர்களுக்கு இடையே நிகழ்ந்த திருமணத்தை ரத்து செய்தது.
இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடைபெற்ற போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிக்க தேசிய புலனாய்வுப் பிரிவுக்கும் பெண்ணின் தந்தை அசோகனுக்கும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணை விவரங்களைப் பெறுவது தொடர்பாக தேசியப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு ஷபின் ஜகான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் விசாரணை தொடர்பான வழக்கு ஆவணங்களை அணுகுவதற்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது தேசிய புலனாய்வுப் பிரிவு.
ஆனால், புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை, நீதிபதிகள் ஜெ.எஸ். கெஹர், டிஒய் சந்திரஹூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, முக்கிய விவகாரமாக எடுத்துக் கொண்டது. மனுதாரருக்கு (ஜகான்) நீதிமன்றம் முன் கொண்டுவரப்பட்டுள்ள சர்ச்சை தொடர்பாக சரியான மற்றும் சுதந்திரமான கருத்தைத் தெரிவிக்க விருப்பம் இல்லை என்ற எண்ணமானது எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என கடந்த 10ஆம் தேதி விசாரணையில் நீதிமன்றம் கூறியது.
வழக்கில் தேசியப் புலனாய்வுப் பிரிவுக்கு உதவி செய்ய கேரள மாநில போலீசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் “எங்களுக்கு முழுமையான விஷயங்கள் தெரியவேண்டும். ஏன் தேசியப் புலனாய்வுப் பிரிவின் மீது சந்தேகம் கொள்ளவேண்டும். தேசியப் புலனாய்வுப் பிரிவின் மீது உங்களுக்கு சந்தேகமா?,” என கேள்வி எழுப்பியது.
இதை அடுத்து, ‘லவ் ஜிகாத்’ வழக்கை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்தரன் தலைமையில் தேசிய புலனாய்வு பிரிவு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். தலைமை நீதிபதி ஜெ.எஸ். கெகர் தலைமையிலான பெஞ்ச், தேசிய புலனாய்வு பிரிவின் விசாரணை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்தரன் தலைமையில் நடைபெறும் என்றது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை முடிந்ததும் அறிக்கையை அளிக்கவேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பேசிய பிறகு, கேரள போலீசின் உள்ளீடு மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்யும் என தெரிவித்தது.
தேசியப் புலனாய்வுப் பிரிவு, ‘லவ் ஜிகாத்’ என நடப்பது உண்மையானதுதான். இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களை மதமாற்றம் செய்வதும், அவர்களை இஸ்லாமிய ஆண்களுக்கு திருமணம் செய்யவும், திட்டமிட்டு செயல்படுத்தப் படுவதை உண்மைதான் எனக் கூறியதை அடுத்தே, இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.



