
புதுதில்லி:
கேரளத்தைச் சேர்ந்த ஒருவரின் லவ் ஜிஹாத் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைனில் பரவலாக உள்ள ப்ளூ வேல் இணையதள விளையாட்டைத் தடை செய்வது குறித்தும் உச்ச நீதிமன்றம் கருத்தைத் தெரிவித்தது. இந்நிலையில், ப்ளூவேல் விளையாட்டை இணையதளங்கள் நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ப்ளூவேல்’ என்று அழைக்கப்படும் ஆன்லைன் விளையாட்டு, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை, தற்கொலைக்கு தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை விளையாடுபவர்களில் பலர், தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், ‘ப்ளூவேல்’ தற்கொலை விளையாட்டிற்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் ‘ப்ளூவேல்’ விளையாட்டு தொடர்புகளை உடனடியாக நீக்குமாறு கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணைய தளங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் நேற்று உச்ச நீதிமன்றத்தின் மூலம் மீண்டும் வெளிப்பட்டது.
25 வயது நிரம்பிய இந்துப் பெண் அகிலா, ஷபின் ஜஹான் மூலம் மூளைச் சலவை செய்யப்பட்டு ஹாடியா என பெயர் மாற்றம் செய்து கொண்டு, இஸ்லாத்துக்கு மாறினார். அதன் பின் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேரும் அளவுக்கு மாறினார்… என்ற அந்தப் பெண் அகிலாவின் தந்தையின் புகாரை விசாரித்த கேரள உயர் நீதிமன்றமும் ஒப்புக் கொண்டது.
ஆனால், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜஹானுக்காக வாதாடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான கபில் சிபல், அந்தப் பெண் மேஜர் தான் என்றும், தாமாக சிந்தித்து முடிவு எடுக்கும் திறன் கொண்டவர் என்றும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளவுக்கு அதிகமாகக் கற்பனை செய்து கொண்டு இந்த வழக்கை அணுகுகிறது என்றும் வாதாடினார்.
அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.ஸ்.கெஹர், நம் நாட்டில் ப்ளூ வேல் சேலஞ்ச் என்ற ஆன்லைன் விளையாட்டு குறித்து கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சிறியவர்களைப் பற்றி என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது, பெரியவர்கள் கூட அதற்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். அந்த விளையாட்டைப் பார்ப்பவர்கள் தாங்களும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தைப் பெறுகிறார்கள். பலர் அதன் மூலம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
நீதிபதியின் இந்தக் கருத்தானது, மேஜர் என்பதற்காக அந்தப் பெண் தானாக விரும்பி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரு கருத்துக்கு, ஒரு கருத்தியல் சார்ந்த இயக்கத்துக்கு அல்லது ஒருவருக்கு அடிமைப்பட்டு மனம் மாறவோ, மதம் மாறவோ வயது ஒரு காரணியாகக் கொள்ள முடியாது என்பதும், முதலில் ஒருவரின் மனத்தை ஈர்த்து மயக்கும் அல்லது அடிமைப்படுத்தும் எந்த ஒரு விளையாட்டோ, மத மாற்றமோ, கருத்தியல் சார்போ, திருமணமோகூட, வயது வித்தியாசமின்றி மனத்தை மட்டுமே மயக்கி தற்கொலைக்குத் தூண்டும் விளையாட்டைப் போன்றது என்பதைச் சொல்லாமல் சொன்னது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில், ப்ளூவேல் விளையாட்டை இணையதளங்கள் நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கூறுகையில், “ இணையதள நிறுவனங்கள் உத்தரவை மீறீனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்கொலைக்கு தூண்டுவது இந்திய சட்டப்படி பெரும் குற்றமாகும்” என்றார்.



