காதலரை கரம் பிடித்த இரோம் ஷரமிளா
சென்னை:
கொடைக்கானலில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து, தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை திருமணம் செய்து கொண்டார் மணிப்பூர் மங்கை இரோம் ஷர்மிளா.
மணிப்பூரில் ராணுவ சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சுமார் 17 ஆண்டுகளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் இரோம் ஷர்மிளா. பின்னர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு திடீரென அரசியலில் குதித்தார்.
அண்மையில் மணிப்பூரில் நடைபெற்ற தேர்தலில் இரோம் ஷர்மிளா போட்டியிட்டார். தாம் நெடுநாட்கள் மணிப்பூர் மக்களுக்காகப் போராடியதால் அரசியலில் தனக்கு குறிப்பிடத் தகுந்த ஆதரவு கிடைக்கும் என்று நினைத்திருந்த நிலையில், அவர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இதனால் தாம் மணிப்பூர் மாநிலத்தை விட்டே வெளியேறுவதாகக் கூறி, தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் தஞ்சம் புகுந்தார். அவருடன் அவரது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவும் கொடைக்கானல் வந்தார். பின்னர் போராட்ட வாழ்க்கையை விடுத்து, திருமண வாழ்க்கையை வாழ்வது என்று இரோம் ஷர்மிளா முடிவு செய்தார். தனது திருமணம் குறித்தும் அவர் அறிவித்தார்.
இந்நிலையில் கொடைக்கானல் சார்பதிவாளரிடம் திருமணப் பதிவுக்காக விண்ணப்பம் செய்திருந்தார் இரோம் ஷர்மிளா. அவர்களது விண்ணப்பம் பரீசிலிக்கப்பட்டு சார் பதிவாளர் முன்னிலையில் இன்று தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சார் பதிவாளர்கள், ஊழியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தேஷ்மந்த் கோட்டின்கோ கொடைக்கானலில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




