
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கொடியேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு தடை விதித்த பாலக்காடு மாவட்ட ஆட்சியர் திடீரென இன்று இடமாற்றம் செய்யப் பட்டார். ஆட்சியர் இடமாற்றம் செய்ய்யப்பட்டது வழக்கமான நிர்வாக நடைமுறைதான் என்று முதல்வர் பிணரயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு நகரில் கர்ணகி அம்மன் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார்கள் எழுந்ததும், மாவட்ட ஆட்சியர் மேரிகுட்டி, அரசு உதவியுடன் இயங்கி வரும் பள்ளிக்கூடங்களில் தேசியக் கொடியை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோ அல்லது பள்ளியின் ஆசிரியர்களோதான் ஏற்ற முடியும் என குறிப்பாணை அனுப்பினார். பள்ளி நிர்வாகம் அதனைப் பெற்றுக் கொண்டது. இருப்பினும், கொடியேற்ற அமைக்கப்பட்ட கம்பத்திற்கு பதிலாக, வேறு ஒரு கம்பம் பள்ளி வளாகத்தில் நடப்பட்டு, அதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கொடியேற்றினார்.
ஆட்சியர் உத்தரவை மீறி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேசியக் கொடியை ஏற்றியதால் சர்ச்சை எழுந்தது. ஆட்சியர் மேரிகுட்டி இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி போலீசைக் கேட்டுக் கொள்வோம் என்றும் கூறியிருந்தார்.
இதனிடையே, பாலக்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த மேரிக்குட்டி இன்று இடமாற்றம் செய்யப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியான மேரிக்குட்டிக்கு பஞ்சாயத்து இயக்குநராக பதவி வழங்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் பினரயி விஜயன், ஆட்சியர் இடமாற்றம் என்பது, வழக்கமான நிர்வாக நடைமுறைதான் என்று தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் குறித்து பதில் அளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



