
புது தில்லி:
நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, ஆக.15 அன்று காலை 7 மணி அளவில் தில்லி செங்கொட்டைக்கு வந்த பிரதமர் மோடி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் 7.30 மணி அளவில் தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார்.
‘மகாத்மா காந்தியும், புத்தரும் பிறந்த இந்த மண்ணில் அனைவரையும் ஒன்று திரட்டி வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதுதான் மரபாக உள்ளது. எனவே, மத நம்பிக்கைகளின் பெயரால் நாட்டில் நடைபெறும் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது’ எனக் கூறிய மோடி, “சமுதாயத்துக்குள் சாதியமும், மதவாதமும், வகுப்புவாதமும் நஞ்சைப் போன்றது. இதனால், நாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. சுதந்திரப் போராட்டத்தின்போது, வெள்ளையர்களை நோக்கி இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று முழங்கியதைப்போல், இந்தியாவை இணயுங்கள் என்ற முழக்கம் தற்போது தேவைப்படுகிறது” என்று கூறினார்.
ஹமீத் அன்சாரி, குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து பணி நிறைவு பெற்று வெளியே வந்தபோது, நாட்டில் இஸ்லாமியர்கள் வாழ அச்சப் படுவதாகத் தெரிவித்தார். அவரது கருத்துக்கு மறைமுகமாக மோடி பதிலளித்ததாகவே தெரிகிறது. தற்போது உத்தரப் பிரதேசத்தில், கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் பலர் இறந்தது குறித்த சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், பிரதமர் மோடி அது குறித்து வாய் திறக்காதது ஏன் என்று பரவலாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக மோடி தமது உரையில் அந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்தார்.
“வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். உத்தர பிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது, எல்லைப் பகுதியில் நீடிக்கும் சிக்கல் போன்ற பல பிரச்னைகளைக் கடந்து, சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால் இந்த நாடே மன வேதனையில் உள்ளது. துன்பங்கள் பல வந்தாலும், விவசாயிகள் கடும் உழைப்பினால் சாதனைகள் படைத்து வருகின்றனர். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தால் ஏராளமான இளைஞர்கள் சொந்தக் காலில் நின்று சுயதொழில் தொடங்கியுள்ளனர்” என்று குறிப்பிட்டார் மோடி.
மேலும், “கடந்த ஆட்சியில் ரயில்வே திட்டங்கள் நிறைவேற 42 ஆண்டுகள் தேவைப்பட்டன. மங்கள்யான் திட்டத்தை 9 மாதத்தில் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளோம். சவால்களைக் கடந்து நாம் ஒற்றுமையுடன் இருப்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. மின்சாரம் இல்லாத 14 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர்களால் சில நேரங்களில் இன்னலைச் சந்திப்பது வேதனை. ஒற்றுமை, கூட்டு முயற்சியால் மட்டுமே தேசத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். விவசாயிகளும், தொழிலாளர்களும் நாட்டின் கண்கள். புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம். அதேபோல், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 5 ஆண்டுகள் நாம் கடுமையாக உழைத்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். நம் நாட்டில் அனைவரும் சமமானவர்கள்; பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது” என்று குறிப்பிட்டார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு திட்டமிட்டு 2022ல் வல்லரசு இந்தியா எனும் கோஷத்தை மோடி முன்வைத்து அண்மைக் காலமாக பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை இந்த உரையிலும் நினைவுகூர்ந்தார் மோடி.
அண்மைக் காலமாக காஷ்மீரில் சில விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு இயக்கங்களுக்கும் வெளிநாடுகளில் இருந்து பணம் வருவது நின்று போயுள்ளது என்பதை மோடி பல சமயங்களில் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரை முன்வைத்த அவரது உரையில், “பயங்கரவாதத்திற்கு எதிராக நமது போராட்டம் என்றும் நீடித்திருக்கும்; இந்தப் போராட்டத்தில் முப்படை வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது. ஜம்மு-காஷ்மீரை சொர்க்க பூமியாக மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும். வன்முறையாலும், துப்பாக்கிச் சூடுகளாலும் காஷ்மீரில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நாம் தனியாக இல்லை; நமக்கு ஆதரவுக் கரம் நீட்ட பல நாடுகள் முன்வந்துள்ளன. பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைக்கும் உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தீவிரவாதத்திற்கு எதிராக நமது போராட்டம் என்றும் நீடித்திருக்கும்; இந்தப் போராட்டத்தில் முப்படை வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது” என்றார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல் படுத்தப் பட்ட பின்னர், நாட்டில் பல இடங்களில் அதற்கு வரவேற்பும், சில பிரிவினரிடம் அதற்கு எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளன. ஒரேநாடு ஒரே வரி என்ற முழக்கத்துடன் அமல்படுத்தப் பட்ட ஜிஎஸ்டி குறித்து குறிப்பிட்ட மோடி, “கூட்டாட்சித் தத்துவத்தின் சாராம்சமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு விளங்குகிறது. ஜிஎஸ்டி வரியால் நாடும், மக்களும் ஒன்றிணைந்துள்ளனர். நீர், நிலம், ஆகாயம் என அனைத்து இடங்களிலும் எதிரிகளை சமாளிக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு. ஏழை மக்கள் மற்றும் நாட்டை கொள்ளையடித்தவர்கள் இன்று நிம்மதியாக தூங்க முடியவில்லை” என்றார் மோடி.


