புது தில்லி: தனது இலங்கைப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்னை குறித்து அவர்களுடன் விவாதித்தார் என்று அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகள் பயணம் குறித்து மக்களவையில் தாமாக முன்வந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சில தகவல்களைக் கூறினார். அப்போது, பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்னையை எழுப்பிய மோடி, “இது இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமானம் தொடர்புடைய சிக்கலான பிரச்னை. எனவே இதற்கு இருநாடுகளும் நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண வேண்டியது அவசியம். இந்தப் பிரச்னை தொடர்பாக இரு நாட்டு மீனவ சங்கங்களும் உடனடியாக சந்தித்து இருதரப்புக்கும் ஏற்ற உடன்பாட்டை செய்துகொள்ள முன்வர வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளார். மேலும், இலங்கைத் தமிழர் உட்பட அனைத்து இன மக்களின் மேம்பாட்டுக்காகவும், சமத்துவ வாழ்க்கை, சம நீதி, அமைதி ஆகியவற்றை நிலைநாட்டும் இலங்கை அரசின் முயற்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும். தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்க வகை செய்யும் 13-வது சட்டத் திருத்தம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகவும் மோடி கூறினார் என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
தமிழக மீனவர் பிரச்னை: இலங்கையில் மோடி எழுப்பியதாக சுஷ்மா ஸ்வராஜ் தகவல்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

