கொழும்பு: வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களால் தொடங்கப்பட்ட தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து இலங்கை அரசு ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மங்கள சமரவீர அறிக்கை அளித்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சிப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, விடுதலைப் புலிகளையும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும் தொடர்புபடுத்தி அந்த அமைப்புக்களை முந்தைய ராஜபட்ச அரசு தடை செய்து உத்தரவிட்டது. ஆனால் அவர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதற்கான எவ்வித உறுதியான ஆதாரங்களும் கொடுக்கப்படவில்லை. அதே நேரம் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளின் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள சில தமிழர்கள் இப்போது உயிருடன் இல்லை. இந்நிலையில் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கு இடையே ஒற்றுமையை நிலை நாட்டும் வகையில் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளார்.
Popular Categories



