புது தில்லி: தில்லியில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி.கே. சிங் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, தனது டிவிட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முந்தைய மத்திய அமைச்சர்கள் மறுத்து விட்டனர். ஆனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் வெறுப்புற்றதாக் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தொடர்பான அரசின் இரட்டை நிலைப்பாட்டைக் கண்டு வெறுப்பு அடைவீர்கள் என்றால் அவர் பதவி விலகட்டும் என மணீஷ் திவாரி கூறியுள்ளார்.
