பெங்களூரு மதுபான விடுதியில் தீ: 5 பேர் பலி

பெங்களூரில் உள்ள மதுபான கூடத்துடன் இணைந்த ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூருவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது கலேசிபாளையம். இங்குள்ள கைலாஷ் எனும் ஹோட்டலோடு, மதுபான விடுதியும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இங்கே இன்று அதிகாலை 2:30க்கு திடீரென தீ பிடித்துள்ளது. அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதை அடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதன் பின்னர் விடுதிக்குள் சென்று பார்த்தபோது, 5 பேர் உடல் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அங்கே பணியில் இருந்த 24 வயதுப் பெண் உட்பட 5 பேர் இரவு அங்கே தங்கி உள்ளனர். அவர்கள் 5 பேரும் தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.