
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப்படை வீரரை சிறைப்பிடித்து அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த வீரரை தற்போது விடுவித்துள்ளனர்.
கடந்த 3ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூரில் பாதுகாப்புப்படையினருக்கு மாவோயிஸ்டுகள் பற்றி தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அந்த தகவல் தவறானது என தெரியவந்தது.

மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப்படை வீரர்களை பிடிக்க வைக்கப்பட்ட பொறி என பின்னர் தெரியவந்தது. இதனையடுத்து பாதுகாப்புப்படை வீரர்களை மாவோயிஸ்டுகள் சுற்றி வளைத்து சுடத் தொடங்கினர். அதில் 22 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
31 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் காணவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் அந்த ஒரு வீரர் தங்களிடம் இருப்பதாக மாவோயிஸ்டுகள் அறிக்கை வெளியிட்டனர்.

அதில், ஜவான்கள் தங்களுக்கு எதிரிகள் அல்ல என்றும், அரசு பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றால் பிடித்து வைத்துள்ள பாதுகாப்புப்படை வீரர் ராகேஸ்வர் சிங்கை விடுவிக்க தயார் என்று தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கோப்ரா படைப்பிரிவை சேர்ந்த ராகேஸ்வர் சிங்கின் புகைப்படத்தை மாவோயிஸ்டுகள் வெளியிட்டனர். இதனிடையே ஜம்முவை சேர்ந்த ராகேஸ்வர் சிங் என்ற அந்த வீரரை மீட்டு தரும்படி அவரது மனைவி பிரதமர், குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் சிறைப்பிடித்து வைத்திருந்த பாதுகாப்புப்படை வீரர் ராகேஸ்வர் சிங்கை மாவோயிஸ்டுகள் விடுவித்துள்ளனர்.