காஷ்மீர் பிரிவினைவாதி விடுதலை விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்: காங்கிரஸ்

புது தில்லி:mufti-mohammed-syed காஷ்மீரில் பிரிவினைவாதி மசாரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. காஷ்மீர் சிறைகளில் இருக்கும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது சயீத் உத்தரவிட்டார். இதையடுத்து, காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த மசாரத் ஆலம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர், கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு வயது 44. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்கும் போராட்டத்தை மக்களிடம் தூண்டி விட்டதாக மசாரத் ஆலமை போலீசார் தேடி வந்தனர். இந் நிலையில் அவர் தலைமறைவானார். அவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர். இந்நிலையில், 2010 அக்டோபரில் அவர் கைது செய்யப்பட்டு பாரமுல்லா சிறையில் அடைக்கப்பட்டார். முதல்வர் முப்தி முகமது சயீத் உத்தரவுப் படி, நேற்று அங்கிருந்து விடுதலை செய்யப்பட்ட மசாரத் ஆலம், ஷாகீத் குனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே, காஷ்மீர் முதல்வரின் நடவடிக்கைக்கு ஆளும் கூட்டணிக் கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மசாரத் ஆலத்தை விடுதலை செய்த செயலுக்கு தனது கண்டனத்தை அது தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநில பாஜக இளைஞரணித் தலைவரும், நவ்ஷேரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரவீந்தர் ரெய்னா, “மசாரத் ஆலம் அரசியல் கைதி அல்ல, அவர் ஒரு பயங்கரவாதி என்பதால் அவரது விடுதலை தேசத்துக்கு அச்சுறுத்தலாக அமையும், அவரை விடுவித்ததை பாஜக., ஒருபோதும் சகித்துக் கொள்ளாது” என்று தெரிவித்தார். மேலும், இதுபோன்று தேசவிரோதிகளும், பாகிஸ்தானுக்கு ஆதரவான தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டால், கூட்டணி அரசை நடத்திச் செல்வது சிரமம்தான் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிந்தர் சர்மா கூறுகையில், ”மசாரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, பிரதம அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் காஷ்மீர் மாநில துணை முதலமைச்சர் நிர்மல் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.