சென்னை: சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, சர்வதேச மகளிர் தினமான மார்ச். 8 அன்று, “தாலி- பெண்ணுக்கு பெருமையா, சிறுமையா?’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்த இருந்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், அந்த அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிடச் சென்றபோது, கைகலப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில்… புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு(இன்று), `பெண்களுக்குத் தாலி தேவையா?’ என்ற விவாதத்தை நடத்துவதாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். இந்த விளம்பரத்தில் பெண்களுக்கு தாலி என்பது நாய்க்கு சங்கலி கட்டுவது போல என ஒரு பெண் பேசுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள், இதனைத் தடுத்து நிறுத்த இந்து முன்னணிக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, புதிய தலைமுறைக்கும் தங்களது ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நம்முடைய ஆட்சேபணையை தெரிவித்தபோது, நிகழ்ச்சியை ரத்து செய்யமுடியாது எனத் தெரிவித்துவிட்டனர். அதனை அடுத்து, எல்லா மாவட்டங்கள், நகரங்களிலும் காவல்துறையிடம் புதிய தொலைக்காட்சி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் கொடுக்கப்பட்டன. காவல்துறை அதிகாரிகள், இதற்கு பெரும் ஆட்சேபம் எழுந்துள்ளது என்பதை எடுத்துக்கூறியும், அதனை அலட்சியப்படுத்தி தொலைக்காட்சி அதிகாரிகள் பேசியுள்ளனர். இன்று காலை 10 மணி அளவில் மாநிலப் பொதுச் செயலாளர் சி. பரமேஸ்வரன் தலைமையில் சென்னை மாநகர இந்து முன்னணி சார்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர். அலுவலகத்திற்கு ஒரு கிலோமீட்டர் முன்பாகவே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி, அனைவரையும் கைது செய்ய முற்பட்டனர். அங்கு ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையில் தடியடி நடத்தினர். அந்த தள்ளுமுள்ளுவை படம்பிடிக்க வந்த பத்திரிகையாளர் காமிரா கீழே விழுந்தது. இதனை திட்டமிட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தது என்பது தற்போது தெரிய வந்ததுள்ளது. அதன் பரபரப்பு செய்தியில் சமூக விரோதிகள் தாக்குதல், பத்திரிகையாளர் மீது தாக்குதல், காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தனர் என செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். நடந்தது ஜனநாயக வழியிலான எதிர்ப்பு, இதனை திசைத்திருப்பும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், புதிய தலைமுறை தொலைக்காட்சி, மக்கள் விரோதமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் மனு மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இனியும் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஈடுபட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவர்களே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கைது விவகாரத்தில், மீடியாவின் கயமைக்கு பயப்படும் காவல்துறையையும் அரசாங்கத்தையும் கண்டிக்கிறோம்.. புதிய தலைமுறை தொலைக்காட்சி சதி செய்து ஒரு நாடகம் நடத்தி இந்து முன்னணி பொறுப்பாளர்களை கைது செய்ய வைத்துள்ளது. இதனால் அதன் கயமைத்தனம் உலகத்திற்கு தெரிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்து முன்னணி நாளை இதற்குக் கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள், போஸ்டர்கள் மூலம் மக்களிடம் நியாயத்தை எடுத்துச் சொல்வார்கள். மீடியாவின் கயமைத்தனத்திற்குத் துணைபோகும் தமிழக அரசையும், காவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அழிவிற்கு அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் வழி என்பதைத் தவிர வேறென்ன சொல்ல. காவல்துறை ஒரு கிலோமீட்டருக்கு முன்பே ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்ய தடுப்புப் போட்டு நின்றனர். இதனிடையே வேண்டுமென்றே அந்த இடத்திற்கு வந்து போலீஸ் நடத்திய தடியடியில் புகுந்த ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி. இது காவல்துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தெரியும். அப்படி இருந்தும் செந்தில்குமரன் கொடுத்த புகாரை அடுத்து
- மாநிலப் பொதுச் செயலாளர் சி. பரமேஸ்வரன்,
- மனோகரன் மாநில நிர்வாகக்குழு உறுப்பனர் 3.இளங்கோ சென்னைமாவட்ட பொதுச்செயலாளர் செயலாளர் 4.முகுந்தன் 5.குமரேசன் 6.ஹரிபாபு 7.ராஜா
- ஜெயகுமார் 9.அய்யப்பன் 10.சீனிவாசன்.
ஆகிய பத்து பேர் மீது 147, 341, 294(),323, 506(2) பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அதேசமயம் இந்து முன்னணியின் சார்பில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு ஊர்களில் கொடுக்கப்பட்ட வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தது காவல்துறை என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். மக்களின் தங்கள் ஆட்சேபணையை தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தற்கு கேவலமாகவும், துச்சமாகவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலைய அதிகாரிகள் பேசியுள்ளனர். இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க தவறினால், இந்தப் பிரச்னையை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. காவல்துறையும், தமிழக அரசும் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டுள்ளதற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. என்று கூறியுள்ளார்.



