
75வது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு மேதகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆக.14 அன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியின் தமிழாக்கம்…
பிரியமான நாட்டுமக்களே, வணக்கம்.
கடந்த ஆண்டினைப் போலவே, பெருந்தொற்றுக் காரணமாக, இந்த ஆண்டும் சுதந்திரத் திருநாளை விமரிசையாகக் கொண்டாட முடியாது என்றாலும், நம் அனைவரின் இதயங்களிலும் உற்சாகம் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. பெருந்தொற்றின் தீவிரம் சற்றுக் குறைந்திருந்தாலும் கூட, கொரோனா நுண்கிருமியின் தாக்கம் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த ஆண்டு தாக்கிய, இந்தப் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் நாசமேற்படுத்தும் தாக்கத்திலிருந்து நம்மால் இன்னும் முழுமையாக மீள முடியவில்லை. கடந்த ஆண்டு, அனைவரின் அசாதாரணமான முயற்சிகளின் பலத்தின் துணைக் கொண்டு, நம்மால் பெருதொற்றின் பரவலைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் வெற்றி பெற முடிந்தது. நமது விஞ்ஞானிகள் மிகக் குறைந்த காலத்தில், தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் கடினமான செயல்பாட்டில் வெற்றி பெற்றார்கள். ஆகையால், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நாம் அனைவரும் நம்பிக்கை நிறைந்தவர்களாய் இருந்தோம், வரலாற்றிலேயே மிகப் பெரிய தடுப்பூசி போடும் இயக்கத்தை நாம் தொடக்கினோம். இருந்தாலும் கூட, கொரோனா நுண்கிருமியின் புதிய வடிவங்களும், பிற எதிர்பாராத காரணங்களின் விளைவாக, நாம் இரண்டாவது அலையின் பயங்கரமான பாதிப்பை அனுபவிக்க வேண்டியிருந்தது. இரண்டாவது அலையின் போது, பலரின் உயிர்களை நம்மால் காப்பாற்ற இயலவில்லை என்பது, எனக்கு ஆழமான வருத்தத்தை ஏற்படுத்துகிறது, பலர் இதனால் பலமான இடர்களை எதிர்கொள்ளவும் வேண்டி வந்தது. இதுவரை காணாத ஒரு சங்கடம் நிறைந்த சூழ்நிலை இது. நாடு முழுமையின் தரப்பிலிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
இந்த நுண்கிருமி, கண்ணுக்குத் தெரியாத, சக்திவாய்ந்த எதிரி. இது விஞ்ஞானத்தின் துணைக்கொண்டு, மெச்சக்தக்க வேகத்தில் எதிர்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தப் பெருந்தொற்றினால் நாம் இழந்த உயிர்களைக் காட்டிலும், காப்பாற்றிய உயிர்கள் அதிகம் என்பது என் மனதிற்கு சற்றே நிறைவை அளிக்கின்றது. மீண்டும் ஒருமுறை, நாம் நமது சமூகரீதியிலான உறுதிப்பாடுகளின் பலத்தால், இரண்டாவது அலையில் வீழ்ச்சியைக் காண முடிகிறது. அனைத்து வகையான சிரமங்களை மேற்கொண்டு, நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நிர்வாகத்தினர் மற்றும் பிற கொரோனா முன்களப் பணியாளர்களின் முயற்சிகளால், கொரோனாவின் இரண்டாவது அலையை நாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்திருக்கிறது.
கோவிடின் இரண்டாவது அலையால், நமது பொதுமக்கள் சுகாதார சேவைகளின் அடித்தளங்கள் மீது பலமான அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், வளர்ந்த பொருளாதாரங்கள் உட்பட, எந்த ஒரு தேசத்தின் அடிப்படைக் கட்டமைப்பாலும், இந்த பயங்கரமான சங்கடத்தை எதிர்கொள்ள முடியவில்லை. நாம் நமது சுகாதார அமைப்பினை பலப்படுத்த, போர்க்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டோம். தேசத்தின் தலைமை, இந்தச் சவாலை உறுதிப்பாட்டோடு எதிர்கொண்டது. மத்திய அரசின் முயற்சிகளோடு கூடவே, மாநில அரசுகள், தனியார் துறையின் சுகாதார வசதிகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகளும், ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கினார்கள். இந்த அசாதாரணமான இயக்கத்தில், எப்படி பாரதம் பல நாடுகளுக்கு, தாராள மனதோடு, மருந்துகள், மருத்துவக் கருவிகள், தடுப்பூசிகளை அளித்ததோ, அதே போல பல நாடுகளும், தாராள உள்ளத்தோடு, அத்தியாவசியமான பொருட்களை நமக்கு அளித்துதவினார்கள். இந்த உதவிக்காக நான் உலக சமுதாயத்துக்கு என் நன்றிகளை வெளிப்படுத்துகிறேன்.
இந்த அனைத்து முயல்வுகளின் விளைவாகவே, கணிசமான அளவுக்கு, இயல்பு நிலை ஏற்பட்டிருக்கிறது, நமது நாட்டுமக்கள் பெரும்பாலானோர் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். இதுவரையிலான அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம், நாம் தொடர்ந்து எச்சரிக்கையோடு இருப்பது அவசியம் என்பது தான். இந்த வேளையில் தடுப்பூசி என்பது, அறிவியல் வயிலாக சுலபமாக்கப்பட்டிருக்கும் மிகச் சிறப்பான ஒரு கவசமாக விளங்குகிறது. நமது நாட்டில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தின்படி இதுவரை, 50 கோடிக்கும் மேற்பட்ட நாட்டுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாகி விட்டது. வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி, விரைவாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், மற்றவர்களும் போட்டுக் கொள்ள உத்வேகம் அளியுங்கள் என்று, நாட்டுமக்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே,
இந்தப் பெருந்தொற்று, மக்களின் ஆரோக்கியத்தை எந்த அளவுக்கு பாதித்ததோ, அதே அளவுக்குப் பொருளாதாரத்தையும் பாதித்தது. ஏழை மற்றும் கீழ் மத்தியத்தட்டு மக்களோடு கூடவே, சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் பிரச்சனைகளின் விஷயத்திலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. பொது ஊரடங்கு காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் இன்னல்களை சந்தித்த தொழிலாளிகள், பணியாளர்களின் தேவைகளை, அரசு கரிசனத்தோடு அணுகுகிறது. அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, கடந்த ஆண்டிலே அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு, பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இந்த ஆண்டும் கூட, அரசு, மே மற்றும் ஜூன் மாதங்களில் சுமார் 80 கோடி மக்களுக்கு உணவுப் பொருள்களை அளித்தது. இந்த உதவி, தீபாவளி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர, கோவிடால் பாதிக்கப்பட்ட சில தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலே, அரசு தற்போது 6 இலட்சத்து 28 ஆயிரம் கோடு ரூபாய் என்ற அளவிலான ஊக்கத் தொகுப்பை அறிவித்திருக்கிறது. சுகாதார வசதிகளின் விரிவாக்கத்தின் பொருட்டு, ஓராண்டுக் காலத்திற்குள்ளாகவே, 23,220 கோடி ரூபாய் செலவு செய்யப்பட இருக்கிறது என்ற இந்த விஷயம், குறிப்பாக மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
அனைத்துத் தடைகளைத் தாண்டி, ஊரகப் பகுதிகளில், குறிப்பாக விவசாயத் துறையில் முன்னேற்றம் பதிவு செய்யப்படுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது, கான்பூரின் ஊரக மாவட்டத்தில் இருக்கும் எனது மூதாதையர் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையை சுலபமானதாக ஆக்க, சிறப்பான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளுக்கு இடையேயான உளவியல் ரீதியிலான இடைவெளி, இப்போது முன்னிருந்ததை விட கணிசமாகக் குறைந்து விட்டது. அடிப்படையில், பாரதம் கிராங்களில் வசிக்கிறது என்பதால், அவற்றை வளர்ச்சிப் பாதையில் பின்தங்கியிருக்க விட முடியாது. ஆகையால், பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவக்கொடையோடு கூடவே, நமது விவசாய சகோதர சகோதரிகளுக்காக, சிறப்பான இயக்கங்களின் மீது அழுத்தமளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த முயற்சிகள் அனைத்தும், தற்சார்பு பாரதம் என்ற நமது எண்ணப்பட்டுக்கு உட்பட்டவை. நமது பொருளாதாரத்தில் அடங்கியிருக்கும் முன்னேற்றத்திற்கான திறன் மீது திடமான நம்பிக்கையோடு அரசு, பாதுகாப்பு, உடல்நலம், பொதுமக்கள் விமானப் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் பிற துறைகளில் முதலீடுகளை, மேலும் சுலபமாக்கி இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ப, எரிசக்தியின் புதுப்பிக்கவல்ல ஆதாரங்கள், குறிப்பாக சூரியசக்தி ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அரசு மேற்கொண்டுவரும் நவீனமான முயற்சிகள், உலகளாவிய பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. வியாபாரம் செய்வதில் சுலபத்தன்மை தரவரிசையில் மேம்பாடு ஏற்படும் போது, அதன் ஆக்கப்பூர்வமான தாக்கம் நாட்டுமக்களின், வாழ்வதன் சுலபத்தன்மையிலும் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, 70,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள பற்றுடன் இணைக்கப்பட்ட உதவித்தொகை காரணமாக, தங்களுக்கென ஒரு சொந்த வீடு என்ற கனவு இப்போது மெய்ப்பட்டு வருகிறது. விவசாய சந்தைப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பல சீர்திருத்தங்கள் காரணமாக, நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயி, மேலும் பலம் பெறுவதோடு, அவர்களுடைய விளைபொருள்களுக்கும் சிறப்பான விலையும் கிடைக்கும். நாட்டுமக்கள் ஒவ்வொருவரின் திறனையும் உறுதிப்படுத்தும் வகையில், அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது, இவற்றிலே சிலவற்றைத் தான் நான் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
பிரியமான நாட்டுமக்களே,
இப்போது ஜம்மு-கஷ்மீரத்தில் ஒரு புதிய விழிப்பினைக் காண முடிகிறது. ஜனநாயக மற்றும் சட்டரீதியான ஆளுகை மீது நம்பிக்கை கொண்ட அனைத்துத் தரப்பினரோடும் ஆலோசனைகளைப் புரியும் செயல்பாட்டை அரசு தொடங்கியிருக்கிறது. ஜம்மு-கஷ்மீரத்தில் வசிப்பவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தின் ஆதாயத்தை அனுபவிக்கவும், ஜனநாயக அமைப்புகளின் வாயிலாக உங்கள் எதிர்பார்ப்புக்களை மெய்ப்பிக்கவும், ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என, குறிப்பாக இளைஞர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
முழுமையான முன்னேற்றம் என்பதன் காரணமாக, சர்வதேச அளவில் பாரதத்தின் நிலை உயர்ந்து வருகிறது. இந்த மாற்றம், முக்கியமாக பலதரப்பு அரங்குகளில், நமது வலுவான பங்களிப்பில் பிரதிபலித்ததோடு, பல நாடுகளுடனான நமது இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் உறுதுணையாக இருக்கிறது.
பிரியமான நாட்டுமக்களே,
75 ஆண்டுகள் முன்பாக, பாரதம் விடுதலை அடைந்தது; அப்போது பலர் மனதில் இருந்த கருத்து, பாரதத்தில் ஜனநாயகம் வெற்றி பெறாது என்பது தான். இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது, அதாவது பண்டைய காலத்தில், மக்களாட்சி முறையின் வேர்கள், இதே பாரத பூமியில் தான் பூத்துக் குலுங்கி மணம் பரப்பியிருந்தது என்ற விஷயம். நவீன காலத்திலும் கூட பாரதம், எந்த ஒரு வேறுபாடு-வேற்றுமையும் இல்லாமல், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பதில், பல மேற்கத்திய நாடுகளை விடமும் முன்னணியில் இருக்கிறது. நாட்டை நிர்மாணித்த சிற்பிகள், மக்களின் விவேகத்தின் மீது தங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள், ”பாரத நாட்டின் மக்களாகிய நாம்” நம்முடைய தேசத்தை ஒரு சக்திவாய்ந்த ஜனநாயக நாடாக சமைப்பதில் வெற்றி கண்டு வருகிறோம்.
நம்முடைய ஜனநாயகம், நாடாளுமன்ற முறையை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால், நாடாளுமன்றம் தான் நமது ஜனநாயகத்தின் ஆலயம். அங்கே தான் மக்கள் சேவையின் பொருட்டு, மகத்துவம் வாய்ந்த விஷயங்கள் மீதான வாத-விவாதங்கள், உரையாடல்கள், தீர்மானங்கள் ஆகியன செய்யக்கூடிய மிகவுயர்ந்த தளம் கிடைத்திருக்கிறது. நாட்டுமக்கள் அனைவருக்கும் மிகவும் பெருமிதம் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், நமது ஜனநாயகத்தின் இந்த ஆலயம், அண்மை வருங்காலத்தில் ஒரு புதிய கட்டிடத்தில் நிறுவப்பட இருக்கிறது. இந்தக் கட்டிடம், நமது கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை வெளிப்படுத்தும். இதிலே நமது மரபுகள்பால் மரியாதை உணர்வு ஏற்படும் என்பதோடு, சமகால உலகத்திற்கு இசைவான வகையிலே பயணிக்கும் திறமையும் வெளிப்படும். சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு என்ற சந்தர்ப்பத்தில், இந்தப் புதிய கட்டிடத்தின் தொடக்கம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு வரலாற்று மையப்புள்ளியாகப் போற்றப்படும்.
இந்த விசேஷமான ஆண்டினை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக ஆக்க, அரசு பல திட்டங்களைத் தொடங்கியிருக்கின்றது. “ககன்யான் மிஷன்” என்பது, இந்த இயக்கங்களில் சிறப்பான மகத்துவம் உடையது. இந்த இயக்கத்தின்படி, பாரத நாட்டு விமானப்படையின் சில விமானிகள், அயல்நாடுகளில் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் விண்வெளியில் பயணிக்கும் போது, பாரதம், மனிதர்களை ஏற்றிக் கொண்டு விண்வெளியில் பயணிக்கும், நான்காவது உலக நாடாகும். இந்த வகையிலே, நமது எதிர்பார்ப்புக்களின் சிறகுகள், எந்தவிதமான கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படப் போவதில்லை.
இருந்தாலும் கூட, நமது கால்கள் யதார்த்தத்தோடு, நிலத்தோடு திடமாக இருக்கவும் வேண்டும். சுதந்திரத்தின் பொருட்டு பல தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை மெய்ப்பிக்கும் திசையில், நாம் இன்னும் முன்னேற்றம் கண்டாக வேண்டும் என்ற உணர்வும் நமக்குண்டு. அந்தக் கனவுகள், நமது அரசியலமைப்புச் சட்டத்தில், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம், என்ற நான்கு பொருள்பொதிந்த சொற்களில், தெள்ளத்தெளிவாக பதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த உலக அமைப்பில், மேலும் சமநிலையை ஏற்படுத்தவும், அநீதிகள் நிறைந்த சூழ்நிலைகளில், மேலும் நீதியை நிலைநாட்டவும், உறுதியான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். நீதியின் பரிபாஷை மிகவும் பரந்துபட்டதாகியிருக்கிறது. இதிலே பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றோடு இணைந்த நீதியும் அடங்கும். நம்மை முன்னோக்கும் பாதை மிக எளியது அல்ல. நாம் பல கடினமான, சிக்கலான படிநிலைகளைத் தாண்டியாக வேண்டும் என்றாலும், நம்மனைவருக்கும் அசாதாரணமான வழிகாட்டுதல் வாய்த்திருக்கிறது. இந்த வழிகாட்டுதல் பல்வேறு ஆதாரங்களிடமிருந்து நமக்குக் கிடைக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பேயே ரிஷி-முனிவர்கள் தொடங்கி, நவீன யுகத்தின் புனிதர்கள்-தேசத் தலைவர்கள் வரை நமது வழிகாட்டிகளின் ஆழமான, நிறைவான பாரம்பரியத்தின் சக்தி நம்மிடத்திலே இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வின் பலத்தோடு, நாம் உறுதியாக, ஒரே நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்ல வேண்டும்.
மரபுவழி நமக்குக் கிடைத்திருக்கும் நமது முன்னோர்களின் வாழ்க்கை குறித்த கண்ணோட்டம், இந்த நூற்றாண்டில் நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்குமே உதவிகரமானதாக அமையவிருக்கிறது. நவீன தொழில்துறை சார் நாகரீகம், மனித சமூகத்தின் முன்பாக தீவிரமான சவால்களை எழுப்பியிருக்கிறது. சமுத்திரங்களின் நீரின் மட்டம் உயர்ந்திருக்கிறது, பனிக்கட்டிப் பாறைகள் உருகி வருகின்றன, பூமியின் தட்பவெப்பத்தில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த வகையிலே, நீர்-காற்று ஆகியவற்றின் மாற்றம் என்ற பிரச்சனை நமது வாழ்க்கையை பாதிக்கின்றது. பாரதம், பேரிஸ் சுற்றுச்சூழல் உடன்பாட்டைப் பின்பற்றி வருகிறது என்பதோடு, நீர்-காற்று ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக தீர்மானிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விடவும் அதிகமாக தனது பங்களிப்பை நல்கி வருகிறது என்பது நம்மனைவருக்கும் பெருமிதம் அளிக்கும் ஒன்றாகும். இருந்தாலும் கூட, மனித சமுதாயமானது, உலக அளவிலே தனது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டயத் தேவை இருக்கின்றது. ஆகையால் பாரதநாட்டு ஞான பாரம்பரியத்தின்பால் உலகத்தின் ஆர்வம் அதிகரித்து வருகிறது; இப்படிப்பட்ட ஞானப் பாரம்பரியம், வேதங்கள் மற்றும் உபநிடதங்களை அருளியவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது, இராமாயணம் மற்றும் மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டிருக்கின்றது, பகவான் மஹாவீரர், பகவான் புத்தர் மற்றும் குரு நானக் ஆகியோரால் பரவலாக்கப்பட்டிருக்கிறது, அண்ணல் காந்தியடிகள் போன்றவர்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது.
- இயற்கை காட்டிய வழிமுறையில் வாழ்க்கை நடத்தும் கலையைக் கற்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலும், நீங்கள் நதிகள், மலைகள், விலங்குகள் மற்றும் பறவைகளோடு ஒரு முறை தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்றால், இயற்கை தனது இரகசியங்களை எல்லாம் உங்கள் முன்னாலே கொட்டி முழக்கி விடும் என்றார் அண்ணல் காந்தியடிகள். வாருங்கள், காந்தியடிகளின் இந்தச் செய்தியை நாம் பின்பற்றுவோம், எந்த பாரத பூமியில் நாம் வசிக்கிறோமோ, அதன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தியாகங்களையும் புரிவோம் என்று நாம் உறுதி மேற்கொள்வோம்.
- நமது சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் நாட்டுப்பற்று மற்றும் தியாக உணர்வு மேலோங்கி இருந்தது. அவர்கள் தங்கள் நலன்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொண்டார்கள். கொரோனா சங்கடத்தை எதிர்கொள்வதிலும், இலட்சக்கணக்கானோர் தங்களைப் பற்றிக் கவலையேதும் படாமல், மனிதநேயத்தோடு, எந்த ஒரு சுயநலமும் பாராட்டாமல் மற்றவர்களின் உடல்நலன் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க, பெரும் அபாயங்களைச் சந்தித்ததை நான் பார்த்தேன். இப்படிப்பட்ட அனைத்து கோவிட் வீரர்களுக்கும், நான் என் இதயம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல கோவிட் வீரர்கள், தங்களுடைய உயிரையும் இதனால் இழக்க வேண்டியிருந்தது. இவர்கள் அனைவரின் நினைவுகளுக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.
- தற்போது தான், ‘கார்கில் விஜய் திவஸ்’ நாளன்று, லத்தாகில் இருக்கும் ‘கார்கில் போர் நினைவுச் சின்னம் – த்ராஸில்’ நமது தீரம் நிறைந்த வீரர்களுக்கு நினைவாஞ்சலிகளை அளிக்க விரும்பினேன். ஆனால் வழியிலே, பருவநிலை மோசமான காரணத்தால், அந்த நினைவுச்சின்னம் வரை செல்வது இயலாததாகி விட்டது. வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அன்று நான் பாராமூலாவின் ‘டைகர் போர் நினைவுச் சின்னத்தில்’, உயிர்த்தியாகம் செய்தோருக்கு சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்தேன். யாரெல்லாம் தங்களின் கடமைப் பாதையிலிருந்து வழுவாமல், உச்சபட்ச தியாகத்தைச் செய்தார்களோ அப்படிப்பட்ட அனைத்து வீரர்களின் நினைவைப் போற்றும் வகையிலே இந்த நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சாகஸமான அந்த வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தைப் போற்றிப் பாராட்டிய போது, அந்த நினைவுச் சின்னத்திலே பொறிக்கப்பட்டிருந்த ஆதர்சமான வாசகத்தை நான் படிக்க நேர்ந்தது. அது ‘எனது அனைத்துப் பணியும், தேசத்திற்காகவே’.
- இந்த ஆதர்ச வாக்கியத்தை நாட்டுமக்கள் நாமனைவரின் மந்திரமாக உள்கரைத்துக் கொள்ள வேண்டும், தேசத்தை முன்னேற்ற, நமது முழு ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்போடு செயலாற்ற வேண்டும். தேசம் மற்றும் சமூகத்தின் நலனை தலையாயவையாகக் கொள்ளும் இந்த உணர்வோடு நாட்டுமக்களாகிய நாமனைவரும், பாரத நாட்டினை வளர்ச்சிப் பாதையில் முன்னே கொண்டு செல்ல ஒன்றிணைவோம்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே,
- குறிப்பாக, நான் நாட்டின் ஆயுதப் படையினரின் வீரர்களை மெச்ச விரும்புகிறேன். அவர்கள் தாம் நமது சுதந்திரத்தைக் காத்தவர்கள், தேவை ஏற்படும் வேளைகளில் எல்லால் உவப்போடு உயிர்த்த்யியாகமும் செய்திருக்கின்றார்கள். அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரையும் கூட நான் பாராட்ட விரும்புகிறேன். அவர்கள் எந்த தேசத்தைத் தங்கள் இல்லமாகக் கருதி வசித்து வருகிறார்களோ, அங்கே தங்கள் தாய்நாடு பற்றிய பிம்பத்தை பிரகாசமானதாக ஆக்கியிருக்கிறார்கள்.
- நான் மீண்டுமொரு முறை அனைவருக்கும், பாரதத்தின் 75ஆவது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வேளையிலே, எனது மனம் இயல்பாகவே, சுதந்திரத்தின் நூற்றாண்டாக வரும் 2047ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த, தன்னிறைவு பெற்ற, அமைதி தவழும் பாரதம் குறித்த ரம்மியமான எண்ணங்களால் நிரம்புகிறது.
- நம் நாட்டுமக்கள் அனைவரும் கோவிட் பெருந்தொற்றின் சீற்றத்திலிருந்து விடுதலை பெற வேண்டும், சுகமான, நிறைவான பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற மங்கலம் நிறைந்த விருப்பங்களை முன்வைக்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரும் என் நல்வாழ்த்துக்கள். நன்றி. ஜெய் ஹிந்த்.
படைப்பு: சென்னை வானொலி நிலையம்
தமிழாக்கம் : ராமஸ்வாமி சுதர்ஸன்