
இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி
– நான்காம் நாள் ஆட்டம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஐந்து ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்திருந்த இந்திய அணி இன்று உணவு இடைவேளைக்கு முன்னர் மேலும் நான்கு விக்கட்டுகளை இழந்தது. முதலில் புஜாரா 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் ரஹானே 4 ரன்னுக்கும் அகர்வால் 17 ரன்னுக்கும், ஜதேஜா ரன் எதுவும் எடுக்காமலுல் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் அஷ்வினும் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ஆறாவது விக்கட்டிற்கு இவர்கள் இருவரும் 52 ரன் சேர்த்த நிலையில் அஷ்வின் ஆட்டமிழந்தார். நேற்று விக்கட் கீப்பிங் செய்யாத விருத்திமான் சாஹா இன்று அஷ்வின் ஆட்டமிழந்ததும் விளையாட வந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் சாஹாவும் சேர்ந்து ஏழாவது விக்கட்டிற்கு 64 ரன்கள் எடுத்தனர்.
இந்த சமயத்தில் ஷ்ரேயாஸ் 65 ரன்னிற்கு ஆட்டமிழந்தார். பின்னர் அக்சர் படேலும் சாஹாவும் சேர்ந்து அணியின் ஸ்கோரை 234 ரன்னுக்கு உயர்த்தினர். அப்போது அணித்தலைவர் ரஹானே ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். இந்திய அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 234 ரன் கள் எடுத்தது. சாஹா (61), அக்சர் படேல் (28) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இன்று 4 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. அதில் வில் யங் 2 ரன்னுக்கு அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி ஆட்ட முடிவில் ஒரு விக்கட் இழப்பிற்கு 4 ரன் எடுத்துள்ளது.
இன்றைய ஆட்டத்தின் சிறப்பு அம்சங்கள் ஷ்ரேயாஸ் ஐயரின் 65 ரன், சாஹாவின் 61 ரன் இவர்கள் இருவருக்கும் துணையாக நின்று ஆடிய அஷ்வின் எடுத்த 32 ரன், அக்சர் படேல் எடுத்த 28 ரன் ஆகியவற்றைச் சொல்ல வேண்டும்.
நியூசிலாந்து அணியின் டிம் சௌதீயும் கைல் ஜேமிசனும் தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடும்போது சாஹா விக்கட் கீப்பிங் செய்யவில்லை; கே.எஸ். பரத் கீப்பிங் செய்தார்.