புது தில்லி: வரதட்சிணை கொடுமை எதிர்ப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய இருப்பதற்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியபோது…. தற்போதைய சட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு நிவாரணமும், பாதுகாப்பும் கிடைக்கிறது. இதுவே தொடர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றம் என்பது மனித உரிமை மீறலாகும். இதில் எந்த சமரசமும் செய்யக் கூடாது. மத்திய அரசின் முடிவை எதிர்க்கிறேன். தில்லியில் 1980 களில், வரதட்சிணை கொடுமை காரணமாக தொடர்ந்து புதுமணப்பெண்கள் உயிரிழந்தனர். இதை அடுத்து, தொடர் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், இந்திய தண்டனைவியல் சட்டத்தில் 498ஏ பிரிவு சேர்க்கப்பட்டது.
