ஆதார் அட்டையை லேமினேட் செய்கிறீர்களா? எச்சரிக்கை!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

ஆதார் அட்டைகளை ரூ.50 முதல் ரூ.300 வரை கொடுத்து லேமினேட் செய்பவர்கள் பலர். காரணம் அது தொலைந்து போகாமல், அல்லது சேதம் அடையாமல் இருக்கும் என்ற நம்பிக்கை பலருக்கு. ஆனால், ஆதார் அட்டையை லேமினேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அடையாள அட்டை வழங்கும் அமைப்பான யுஐடிஐஏ எச்சரித்துள்ளது.

ஆதார் அட்டையை லேமினேட் செய்வதால் அதில் உள்ள க்யூஆர் கோட் அச்சு தவறுதலாக பதிவாகி, ஆதார் அட்டை உரிமையாளரைக் குறித்த தவறான தகவல்களை அது அளிக்கக்கூடும் என்றும், பல நேரங்களில் இது தகவலை எடுக்க உதவாமலும் போகக் கூடும் என்றும், எனவே ஆதார் அட்டையை லேமினேட் செய்ய வேண்டாம் என்றும் யுஐடிஐஏ தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டையை கணினியில் இருந்து டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துவைத்துக் கொண்டு அதை வெறும் காகிதமாக வைத்திருந்தால்கூட அது ஏற்கத் தக்கதாக இருக்கும். அதில் உள்ள விவரங்கள் மாறாமல் இருக்கும். இதைப் போல எம்ஆதார் செல்லத்தக்கது என்று அது தெரிவித்துள்ளது.

பொதுவாக பிளாஸ்டிக் மற்றும் லேமினேட் செய்யப்பட்ட கார்டுகளின் க்யூஆர் கோட் பல நேரங்களில் வேலை செய்வதில்லை. அதேபோல இதில் உள்ள தகவல்கள் கசிவதற்கும் வாய்ப்புள்ளது. உரிமையாளருக்குத் தெரியாமலேயே அவரைப் பற்றிய விவரங்கள் மற்றொருவர் வசம் செல்லவும் வாய்ப்புள்ளது.

பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் அவசியமற்றவை. இதற்காக செலவிடும் தொகையும் அனாவசியம் என்று யுஐடிஐஏ தலைமைச் செயல் அதிகாரி பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை அளித்து அதைக் கொண்டு தனியார் கடைகளில் லேமினேட் கார்டு பெறுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல பொதுமக்களிடம் தகவலைப் பெற்று லேமினேட்டட் அட்டைகளை வழங்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு,சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.