படேல் பிரதமர் ஆகியிருந்தால் காஷ்மீர் முழுதும் இந்தியாவுடன் இணைந்திருக்கும்: நேருவைத் தாக்கிய மோடி

இந்தியா சற்றுமுன்

புது தில்லி:

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லப பாய் படேல் மட்டும் பிரதமர் ஆகியிருந்தால், காஷ்மீர் முழுதும் இந்தியாவுடன் இணைந்திருக்கும் என்று பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசினார் பிரதமர் மோடி. அவரது இன்றைய உரை குறித்து பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. இன்றைய அரசியல் சூழலில், பட்ஜெட் குறித்த விவாதங்கள் ஊடகங்களில் பரவலாக தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடியின் உரை பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மோடி பேசினார்.

நாடாளுமன்ற மக்களவையில் மோடி பேசியபோது, ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் பேசுவது விந்தையாக இருக்கிறது. ஒரு குடும்பத்துக்காக மட்டுமே காங்கிரஸ் உழைத்தது. ஆந்திராவின் பெருமைக்குரிய மைந்தர் நீலம் சஞ்சீவி ரெட்டியை காங்கிரஸ் அவமானபடுத்தியது. அதை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்தியாவில் எவரும் காங்கிரஸ் கட்சியிடம் ஜனநாயகம் குறித்து பாடம் கேட்கவில்லை.

கேரளாவில் காங்கிரஸ் செயல்பட்டது எப்படி? பஞ்சாபில் அகாலிதளத்தை காங்கிரஸ் எப்படி நடத்தியது? தமிழகத்தில் அது நடந்து கொண்டது எவ்வாறு? தங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி எல்லாம் பல மாநில அரசுகளை காங்கிரஸ் கலைத்தது ஏன்? நிச்சயமாக இது ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லைதான். ராஜீவ் ஹைதராபாத்துக்குச் சென்ற போது, காங்கிரஸ் தலைவராக இருந்த அஞ்சையாவிடம் அவர் எப்படி நடந்து கொண்டார்? பெருந்தலைவரை அவர் அவமானப் படுத்தினார். சொந்த குடியரசுத் தலைவர் வேட்பாளரையே ஆதரிக்காமல் பின்வாங்கிய கட்சி காங்கிரஸ்.

காங்கிரஸில் உள்ள 15 குழுக்களில் 12 ஐ உருவாக்கியவர் சர்தார் வல்லப பாய் படேல். ஆனால் அவரை அக்கட்சி பிரதமர் ஆக்கவில்லை. படேல் அன்று பிரதமர் ஆகியிருந்தால், காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கொண்டு சென்றிருக்க முடியாது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும். முழு காஷ்மீரும் இந்தியாவுடன் இருந்திருக்கும்! – என்று பேசினார் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.