புது தில்லி:
காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே பேசியதற்கு, கர்நாடக தேர்தலில் சித்தராமையா பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜனநாயகம் குறித்துப் பேச காங்கிரஸுக்கு அருகதை இல்லை என்றும் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசினார் பிரதமர் மோடி. அவரது இன்றைய உரை குறித்து பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. இன்றைய அரசியல் சூழலில், பட்ஜெட் குறித்த விவாதங்கள் ஊடகங்களில் பரவலாக தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடியின் உரை பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மோடி பேசினார்.
நாடாளுமன்ற மக்களவையில் மோடி பேசியபோது, நான் மல்லிகார்ஜுன கார்கே பேசியதை அமைதியாக கவனித்தேன். ஆனால், நான் பேசும் போது, எனது உரைக்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. இத்தகைய எதிர்ப்புக் குரல்களால் எனது குரலை ஒடுக்க முடியாது. கார்கே, யாரை திருப்திப்படுத்த முயன்றார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சுக்கு கர்நாடகத்தில் சித்தராமையா பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். கர்நாடகத்தில் வரும் தேர்தலுக்குப் பின் கார்கே மக்களவையில் இருப்பாரா என்பது உறுதியாகத் தெரியாது.
காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் செய்ததற்கான பலனை தற்போது அறுவடை செய்து வருகிறது. நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பது ஜனநாயகத்தின் உயிர்நாடி. எந்தக் காரணமும் இல்லாமல் காங்கிரஸ் என்னை விமர்சனம் செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா வளர்ச்சியைப் பெறவில்லை. ரேடியோவும், டிவியும் காங்கிரஸ் கட்சிக்காகவே அர்ப்பணிக்கப்பட்டன. எதிர்ப்பை வெளிக்காட்ட காங்கிரஸ் ஆட்சியில் இடம் இருந்ததில்லை. நீதித்துறை உள்ளிட்ட அனைத்தும் காங்கிரசின் கட்டுப்பாட்டிலேயேதான் இருந்தன. பழங்காலத்தில் இருந்த ஜனநாயக நெறிமுறைகளை காங்கிரஸ் வழங்க்கவில்லை. ஜனநாயகம் பற்றி பேசும் நீங்கள், அது பற்றி எங்களுக்கு பாடம் நடத்த முயற்சி செய்கிறீர்களா?
ஊடகத்தின் முன் உங்கள் கட்சித் தலைவர் பேப்பரைக் கிழித்தெறிந்தார். உங்கள் கட்சித் தலைவர் மட்டும், இளம் தலைவர்களின் பேச்சைக் கேட்கவே மாட்டார். ஆனால் நீங்களோ ஜனநாயகம் குறித்து பேசி வருகிறீர்கள். இந்தியாவின் பாரம்பரிய வரலாறைத் திரும்பி பார்த்தால், ஜனநாயகத்திற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ஜனநாயகம் என்பதே, நமது கலாசாரத்தில் ஓர் அங்கம்தானே.
சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி மட்டும் கடுமையாகவும் உண்மையாகவும் மக்கள் நலனுக்காக உழைத்திருந்தால், இந்தியா இன்று இருக்கும் நிலையை விட பல மைல் தூரம் முன்னேற்றம் கண்டிருக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, ஒரு குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தியது. அந்தக் குடும்பத்தின் புகழ் பாடுவதையே, காங்கிரசார் வேலையாக வைத்திருந்தனர். ஜனநாயகம் நமது ரத்தத்தில் உள்ளது. ஆனால், அதனை காங்கிரசும் நேருவும் கொண்டு வரவில்லை. ஜனநாயகம் தழைப்பதை காங்கிரஸ் தடுத்தது. ஜனநாயகம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதையில்லை. வாரிசு அரசியல் கண்டவர்கள் ஜனநாயகம் குறித்து பேசக்கூடாது. காங்கிரஸ் கட்சி, ஜனநாயகம் குறித்து பாடம் நடத்தக்கூடாது என்று பதிலளித்தார் மோடி.