- அரவிந்த் சுப்பிரமணியன்
அனந்தஸ்ரீவிபூஷித ஸ்ரீ ஸ்வரூபானந்த மஹராஜ் ஸித்தியடைந்த செய்தி ஆன்மீக உலகுக்கு ஓர் பேரிழப்பாக வந்து சேர்ந்தது.
ஜோஷி (பதரீ பீடம்), மற்றும் த்வாரகா பீடம் இரண்டு பீடங்களுக்கும் ஒருசேர சங்கராச்சாரியாராக பீடத்தை அலங்கரித்த சிறப்பினை உடையவர். பூர்வாசிரமத்தில் சுதந்திர போராட்ட வீரராகவும் விளங்கினார்.
தனது 26ஆவது வயதில் ஜோதிஷ் பீட சங்கராச்சாரியாரான ப்ரம்மானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகளால் ஸன்யாஸ தீட்சை வழங்கப்பெற்று, பின்னர் 1973இல் பெயர் ஜோதிஷ் பீட சங்கராச்சாரியார் ஆக பீடாரோஹணம் செய்தார். பின்னர் துவாரகா பீடத்திற்கும் சங்கராச்சாரியார் இல்லாத நிலை உருவானபோது அந்த பீடத்திலும் பீடாரோஹணம் செய்து இரண்டு பீடங்களுக்கும் பீடாதீச்வரராக விளங்கி வந்தார்.
ஸம்பிரதாய விஷயங்களில் மிகச் சரியாகவும், நிர்தாட்சண்யமாகவும் பேசக்கூடியவர். தர்ம ஸாம்ராட்டான கரபாத்ரி மஹராஜுடைய அன்புக்கு பாத்திரமாக விளங்கிய இவர், கோ ஹத்தியை – பசுவதையை கடுமையாக எதிர்த்து அதனால் பலமுறை காங்கிரஸ் அரசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆஜானுபாகுவான உடல் தோற்றம் கொண்ட ஸ்ரீ ஸ்வாமிகள் யோகாப்யாஸத்தினால் உடலை கட்டு கோப்பாக வைத்து இருந்தார்.
தனது 90 வயது வரை கங்கையில் குதித்து நீச்சலடித்து வெளியே வந்த பிறகு தான் அனுஷ்டானங்களையும் பாஷ்ய பாடங்கள் நடத்துவதையும் வழக்கமாக கொண்டிருந்தார் என்றால் அவர் உடல் உறுதியை நாம் அறிந்து கொள்ளலாம்.
99 வயதாகும் இவர் ஒரு சில மாதங்கள் முன்பு வரை கூட தனது சிஷ்யர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பிரதாய விஷயங்களில் மிகத் தெளிவாக சர்ச்சையானாலும் பரவாயில்லை என்றே பேசுவார். சனி சிங்கனாப்பூர் விஷயத்திலாகட்டும், நியோ சாமியார்களை கண்டிப்பதாகட்டும், அயோத்யா ஆலய பூமி பூஜை முஹூர்த்த நிர்ணயத்திலாகட்டும், ராமசேது, கங்கையை மாசு படுத்துதல் என பலநேரங்களில் முகத்திலடிப்பது போல உண்மையை பேசுவதனாலேயே பலரது அதிருப்திக்கும் ஆளானார்.
பசுவதையை கடைசி வரை எதிர்த்து வந்தார். பசுவதை செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
அவருடனான அறிமுகம் சமீபத்தில்தான் கிடைத்தது என்றாலும் அது மறக்க முடியாத ஒரு ஆசீர்வாதமாக இருந்தது.
2015ஆம் ஆண்டு ஸ்ரீஅவிமுக்தீஸ்வர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மூலமாகவும் பின்னர் ஸ்ரீஅமிர்தானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் மூலமாகவும் ஸ்ரீ ஸ்வரூபானந்த்ஜி மஹராஜ் உடன் தொடர்பு கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. நமது உபாஸனை, ஸம்ப்ரதாயங்கள் ஆகியவற்றை விபரமாகக் கேட்டறித்து, நமது ஆன்மீகப்பணிகள், உபந்யாஸங்கள், நூல்கள் குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து ஆசீர்வதித்தார்.
எங்களது குழுவினரின் நிறுவனம் மூலமாக விக்ரஹ மூர்த்திகள் செய்கிறார்கள் என்று சொன்னதும், ஆலயங்களுக்கும், உபாஸகர்களுக்கும் பயன்படும் விதமாக மூர்த்தி, விக்ரகங்கள், யந்த்ரங்கள் போன்றவற்றை, த்யான ச்லோகத்துடன் சாஸ்திர பிரமாணமாக செய்ய வேண்டும் என்று உறுதிபடக் கூறி ஆசீர்வதித்தார்.
ஸ்ரீஸ்வரூபானந்த் மஹராஜ் அவர்களின் கோபம் பிரசித்தமானது ! அதனால் கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும் என்பதற்கும் அவர் உதாரணமாக விளங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய “சக்தி பராக்கிரமம்” நூலுக்கு ஆசிர்வாதம் செய்து ஸ்ரீ முகம் அருள வேண்டுமென்று ஸ்வாமிகளிடம் விண்ணப்பித்திருந்தேன்.
“தமிழ் மொழி புத்தகத்தை நான் என்னவென்று புரிந்து கொள்வது? அதெல்லாம் தர முடியாது” என்று முதலில் கூறி விட்டார். பின்னர் அம்பிகையின் 64 லீலைகளை பற்றிய புத்தகம் என்று சொன்னதும், “சரி 64 லீலைகளும் எங்கே, எந்த எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் முழுமையாக சொல்ல வேண்டும்” என்று கூறினார்.
நானும், ஒவ்வொரு லீலைகளையும் தனியே எடுத்து மூல ச்லோகங்களுடன் ஹிந்தி மொழியில் அதன் சுருக்கத்தையும் எழுதி ஸமர்ப்பித்தோம்! முழுமையும் படிக்கச் சொல்லி கேட்டறிந்த ஸ்வாமிகள் மிக்க மகிழ்ச்சி கொண்டதன் அடையாமாக, ஒரு ஸ்ரீமுகம் கேட்டவனுக்கு 2 மடத்தினுடைய சார்பிலும், ஜோஷி பீடம் – த்வாரகா பீடம் இரண்டு பீடத்திலிருந்தும் தனித்தனியாக ஸ்ரீமுகம் எழுதி
அனுக்ரஹம் செய்து, தன் கைப்பட கையொப்பமிட்டு எனக்கு அளித்தது மிகப்பெரிய ஒரு பாக்யமாக நினைக்கிறேன்.
தொண்ணூற்றி எட்டு வயதில் நவாவரண பூஜையில் தச முத்திரையை போட்டு ஒரு வணங்கக் கூடிய அந்த அழகு இன்னும் கண்முன்னே நிற்கிறது. அவர் சரீரம் மறைந்தாலும் பராம்பிகையின் ஸ்ரீபுரத்தை அடைந்து அங்கிருந்து ஆசீர்வதிப்பார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை!
ஸ்ரீ மாத்ரே நம: