ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு கட்டுப்பாடு அவசியமாகிறது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியது. தமிழகத்தில் 50 மாவட்டங்களில் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பேரணி விவகாரத்தில் தமிழக அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் ஆர்.எஸ்.எஸ். வழக்கறிஞர் கூறினார்.
இதனை கேட்ட தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் அதிர்ச்சியடைந்தார். தமிழகத்தில் 50 மாவட்டங்களா?. நான் கேள்விப்பட்டதே இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். மேலும் பிரச்சனைகள் உள்ள இடங்களில் மட்டுமே பேரணி நடத்த அனுமதி மறுத்ததாகவும், முழுமையாக தடை விதிக்கவில்லை எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிங்கர் கூறினார்.
எந்தெந்த இடங்களில் அனுமதி தர முடியும் என்ற விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை மற்றும் தரவுகளை நீதிபதிக்கு வழங்கியதாக தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மாநில அரசின் பரிந்துரைகளையும், கருத்துக்களையும் உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் சட்டம், ஒழுங்கு என்பது மாநில அரசின் கடமை, அதில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.