
நேற்று ஒருபுறம் செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருக்கிறார், அவரை மூன்று முறை பெயர் சொல்லி அழைத்த போதும், அசையக்கூட இல்லை என்றெல்லாம் அமைச்சர்கள் சேகர் பாபு உள்ளிட்ட சிலர் சொல்லிக் கொண்டிருந்த போது, உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர், செந்தில் பாலாஜி நன்றாக உள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று சான்றளித்தார்கள். முதல்வர் ஸ்டாலின் சென்று பார்த்த போது, எழுந்து அமர்ந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார் செந்தில் பாலாஜி. இத்தகைய காட்சிகளால் செந்தில் பாலாஜி விவகாரம் பெரும் நாடகம் என்ற ரீதியில் அரசியல் மட்டத்தில் கருத்துகள் பரவின.
இதனிடையே, இதய பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகள், உடனுக்குடன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.
அமலாக்கத் துறையினர் கைது செய்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏட்ரியோவென்ட்ரிகுலர், மிட்ரல், ட்ரைகுஸ்பிட் ஆகிய மூன்று வால்வுகளில் 60 முதல் 80 சதவீத அடைப்பு இருப்பதாகக் கூறினர். அதனால் பைபாஸ் அறுவை சிகிச்சை தான் மேற்கொள்ள வேண்டும் என்றும், எவ்வளவு விரைந்து செய்ய முடியுமோ அவ்வளவுக்கு நல்லது என்றும் பரிந்துரைத்தனர்.
ஆனால், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அமலாக்கத் துறையினர் திருப்தி அடையவில்லை. அந்த அறிக்கை குறித்தும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்தும் உறுதி செய்ய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர்கள் ஐந்து பேர் கொண்ட குழு, செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்தது.
இதன் பின், செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகள், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை, கொடுக்கப் படும் மருந்துகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அமலாக்கத் துறையினர் அனுப்பி வருகின்றனர்.