
இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் 14.08.2023 அன்று சுதந்திர தினத்திற்கு முதல் நாள் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
தமிழில் : முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
என் அன்பான சக குடிமக்களே,
77வது சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது நம் அனைவருக்கும் ஒரு மகிமையான மற்றும் மங்கலகரமான சந்தர்ப்பமாகும். கொண்டாட்டம் நாடெங்கிலும் நடப்பதைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில், இந்தியாவில் எல்லா இடங்களிலும் உள்ள அனைவரும் எப்படி உற்சாகமாகவும், நமது சுதந்திரப் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகிறார்கள் என்பதைப் பார்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பெருமைக்குரிய விஷயம். ‘சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை’ மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் என் குழந்தைப் பருவ நாட்களையும் நினைவூட்டுகின்றன. எங்கள் ஊர் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட உற்சாகத்தை அடக்க முடியவில்லை. மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டபோது, நம் உடலின் வழியே மின்னல் சென்றதுபோல உணர்ந்தோம். தேசபக்தி நிறைந்த நெஞ்சோடு தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி தேசிய கீதத்தைப் பாடினோம். இனிப்புகள் வழங்கப்பட்டன, தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டன, அவை பல நாட்கள் எங்கள் மனதில் ஒலித்தன. நான் பள்ளி ஆசிரியராக ஆனபோது இந்த அனுபவங்களை மீண்டும் வாழ வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்.
நாம் வளரும்போது, குழந்தைகளைப் போல நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் தேசிய பண்டிகைகளைக் கொண்டாடுவதில் தொடர்புடைய தேசபக்தியின் தீவிரம் சிறிதும் குறையவில்லை என்று நான் நம்புகிறேன். சுதந்திர தினமானது நாம் வெறுமனே தனிநபர்கள் அல்ல, ஆனால் நாம் ஒரு பெரிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது. இது மிகப்பெரிய சமூகமாக இருக்கும் நம்முடைய, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களின் சமூகம் என்பதை நினைவூட்டுகிறது.
நாம் சுதந்திர தினத்தை கொண்டாடுவது நாம் ஒரு சிறந்த ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதைத்தான். நம் ஒவ்வொருவருக்கும் பல அடையாளங்கள் உள்ளன – சாதி, மதம், மொழி மற்றும் பிரதேசம் தவிர, நாம் நம் குடும்பங்கள் மற்றும் தொழில்களுடன் அடையாளம் காணப்படுகிறோம் – ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அடையாளம் உள்ளது. அதுவே இந்திய குடிமக்கள் என்ற நமது அடையாளம். நாம் ஒவ்வொருவரும் சமமான குடிமக்கள்; நம் ஒவ்வொருவருக்கும் இந்த மண்ணில் சம வாய்ப்பு, சம உரிமை மற்றும் சம கடமைகள் உள்ளன.
ஆனால் அது எப்போதும் அப்படி இல்லை. இந்தியா ஜனநாயகத்தின் தாய், பழங்காலத்திலிருந்தே ஜனநாயக அமைப்புகள் நம் நாட்டின் அடிமட்டத்தில் இயங்கி வருகின்றன. ஆனால் நீண்ட கால காலனித்துவ ஆட்சி அவற்றை அழித்துவிட்டது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, தேசம் ஒரு புதிய விடியலுக்கு எழுந்தது. அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது மட்டுமல்ல, நமது விதியை மாற்றி எழுதும் சுதந்திரத்தையும் பெற்றோம்.
நமது சுதந்திரத்துடன் அந்நிய ஆட்சியாளர்கள் பல காலனிகளில் இருந்து வெளியேறும் சகாப்தம் தொடங்கியது மற்றும் காலனித்துவம் அதன் முடிவை நெருங்கியது. நமது சுதந்திரப் போராட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் நோக்கம் அடையப்பட்டது என்பது மட்டுமல்ல, அது எவ்வாறு போராடப்பட்டது என்பதும்தான். மகாத்மா காந்தியின் தலைமையின் கீழும், அசாதாரன தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களின் கீழும், நமது தேசிய இயக்கம் ஒரு தனித்துவமான இலட்சியங்களால் உயிர்ப்பிக்கப்பட்டது. காந்திஜி மற்றும் பலர் இந்தியாவின் ஆன்மாவை மீண்டும் தூண்டிவிட்டு, தேசத்தின் நாகரீக விழுமியங்களை மீண்டும் கண்டறிய உதவினார்கள். இந்தியாவின் பிரகாசமான முன்மாதிரியைப் பின்பற்றி, நமது எதிர்ப்பின் அடிப்படைக் கல்லான ‘உண்மையும் அகிம்சையும்’ உலகெங்கிலும் பல அரசியல் போராட்டங்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, உலக நாடுகளின் மத்தியில் இந்தியா தனது சரியான இடத்தை மீண்டும் பெறுவதற்கு அவர்களின் தியாகங்களால் அறியப்பட்ட மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றியுடன் அஞ்சலி செலுத்துவதில் எனது சக குடிமக்களுடன் இணைந்து கொள்கிறேன். மாதங்கினி ஹஸ்ரா, கனக்லதா பருவா போன்ற சிறந்த பெண் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பாரத மாதாவுக்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். மா கஸ்தூரிபா சத்தியாகிரகத்தின் கடினமான பாதையில் ஒவ்வொரு அடியிலும் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியுடன் பொருந்தினார். சரோஜினி நாயுடு, அம்மு சுவாமிநாதன், ரமா தேவி, அருணா ஆசப்-அலி, சுசேதா கிருப்ளானி போன்ற பல சிறந்த பெண் தலைவர்கள், எதிர்கால சந்ததி பெண்கள் அனைவருக்கும், தேசத்திற்கும் சமுதாயத்திற்கும் தன்னம்பிக்கையுடன் சேவையாற்ற வேண்டும் என்ற எழுச்சியூட்டும் இலட்சியங்களை அமைத்துள்ளனர். இன்று, பெண்கள் வளர்ச்சி மற்றும் நாட்டிற்கு சேவை செய்யும் அனைத்து துறைகளிலும் விரிவான பங்களிப்பை அளித்து தேசத்தின் பெருமையை உயர்த்தி வருகின்றனர். சில தசாப்தங்களுக்கு முன்னர் கற்பனைக்கு எட்டாத பங்கேற்பு, பல துறைகளில் இன்று எமது பெண்கள் தமது சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளனர்.
நமது நாட்டில் பெண்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதார வலுவூட்டல் குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களின் நிலையை பலப்படுத்துகிறது. பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சக குடிமக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நமது சகோதரிகள் மற்றும் மகள்கள் தைரியமாக சவால்களை வென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நமது சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களில் பெண்களின் வளர்ச்சியும் இருந்தது.
அன்புள்ள குடிமக்களே,
சுதந்திர தினம் என்பது நமது வரலாற்றுடன் மீண்டும் இணைவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். நமது நிகழ்காலத்தை மதிப்பிடுவதற்கும், நமது முன்னோக்கி செல்லும் வழியைப் பற்றி சிந்திக்கவும் இது ஒரு சந்தர்ப்பமாகும். நிகழ்காலத்தைப் பார்க்கும்போது, இந்தியா உலக அரங்கில் தனக்கான சரியான இடத்தை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல், சர்வதேச ஒழுங்கிலும் தனது நிலையை உயர்த்தியிருப்பதைக் காண்கிறோம். என்னைச் சந்திக்க வருகின்ற புலம்பெயர்ந்த இந்திய உறுப்பினர்களுடனான உரையாடல்களின் போது, இந்தியக் கதையில் ஒரு புதிய நம்பிக்கையை நான் கவனிக்கிறேன். உலகம் முழுவதும் வளர்ச்சி மற்றும் மனிதாபிமான இலக்குகளை ஊக்குவிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இது சர்வதேச மன்றங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது, குறிப்பாக ஜி-20 தலைவர் பதவி.
G-20 உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை பிரதிநிதித்துவப்படுத்துவதால், உலகளாவிய உரையாடலை சரியான திசையில் வடிவமைக்க இது ஒரு தனித்துவமான வாய்ப்பாகும். ஜி-20 தலைவர் பதவியில், இந்தியா சமமான முன்னேற்றத்தை நோக்கி வர்த்தகம் மற்றும் நிதியில் முடிவெடுக்கும். வர்த்தகம் மற்றும் நிதிக்கு அப்பால், மனித வளர்ச்சியின் விஷயங்களும் நிகழ்ச்சி நிரலில் உள்ளன. புவியியல் எல்லைகளால் மட்டுப்படுத்தப்படாத அனைத்து மனிதகுலத்தையும் பற்றிய பல உலகளாவிய பிரச்சினைகள் உள்ளன. உலகளாவிய பிரச்சினைகளைக் கையாள்வதில் இந்தியாவின் நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவத்துடன், உறுப்பு நாடுகள் இந்த முனைகளில் பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவியில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த இராஜதந்திர நடவடிக்கை அடிமட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விதம். மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் முதன்முறையாக ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் G-20 இன் கருப்பொருளைத் தொட்டு நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து குடிமக்களும் G-20 தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வமாக உள்ளனர்.
அன்புள்ள சக குடிமக்களே,
இந்த உற்சாகம், அதிகாரமளிக்கும் உணர்வுடன், சாத்தியமானது, ஏனென்றால் தேசம் அனைத்துத் துறைகளிலும் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் கொந்தளிப்பான காலங்களில் மீள்திறன் கொண்டது மட்டுமல்ல, மற்றவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் உள்ளது. உலகப் பொருளாதாரம் ஒரு நுட்பமான கட்டத்தை கடந்து செல்கிறது; ஏனெனில் கோவிட் பெருந்தொற்றைத் தொடர்ந்து சர்வதேச நிகழ்வுகள் நிச்சயமற்ற நிலையில் உள்ளன. ஆயினும்கூட, இந்தக் கடினமான காலத்தை மிகச் சிறப்பாகக் கடக்க அரசாங்கத்தால் முடிந்தது. இந்தியா சவால்களை வாய்ப்புகளாக மாற்றி, அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நமது பொருளாதார வளர்ச்சிக்கு நமது அன்னதாதா விவசாயிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளனர். தேசம் அவர்களுக்குக் கடமைப்பட்டிருப்பதாக உணர்கிறது.
உலக அளவில் பணவீக்கம் கவலைக்குரியதாக உள்ளது. ஆனால் இந்தியாவில் அரசும், ரிசர்வ் வங்கியும் அதைக் கட்டுப்படுத்திவிட்டன.
அதிக பணவீக்கத்திலிருந்து எளிய மக்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது, அதே வேளையில் ஏழைகளுக்கு விரிவான பாதுகாப்பையும் வழங்குகிறது. உலகப் பொருளாதார வளர்ச்சிக்காக உலகமே இந்தியாவை எதிர் பார்க்கிறது.
தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றம் இரு முனை மூலோபாயத்தால் இயக்கப்படுகிறது. ஒருபுறம், வணிகத்தை எளிதாக்குவதன் மூலமும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் நிறுவன சக்திகளை கட்டவிழ்த்துவிட ஒரு நிலையான உந்துதல் உள்ளது. மறுபுறம், தேவைப்படுபவர்களுக்கான முன்முயற்சி மற்றும் விரிவாக்கப்பட்ட நலத்திட்டங்கள் பல்வேறு களங்களில் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த தசாப்தத்தில் ஏராளமான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்த எங்கள் கொள்கைகள் மற்றும் செயல்களின் மையமாக பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது உள்ளது. அதேபோல், பழங்குடியினரின் நிலைமைகளை மேம்படுத்தவும், முன்னேற்றப் பயணத்தில் சேர அவர்களை ஊக்குவிக்கவும் குறிப்பிட்ட திட்டங்கள் உள்ளன. நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் நவீனத்துவத்தை தழுவி தங்கள் பாரம்பரியங்களை வளப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பொருளாதார வளர்ச்சியுடன், மனித-வளர்ச்சி-அக்கறைகளுக்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு ஆசிரியராகவும் இருந்ததால், சமூக அதிகாரமளிப்பதற்கான மிகப்பெரிய கருவி கல்வி என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். 2020ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. பல்வேறு நிலைகளில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடனான எனது தொடர்புகளிலிருந்து, கற்றல் செயல்முறை மிகவும் நெகிழ்வானதாக மாறியுள்ளது என்பதை நான் புரிந்துகொள்ள முடிகிறது. பண்டைய விழுமியங்களை நவீன திறன்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட தொலைநோக்குக் கொள்கை, பல ஆண்டுகளாக கல்வித் துறையில் முன்னோடியில்லாத மாற்றங்களைக் கொண்டுவரும். இது தேசத்தின் பெரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் அதன் மக்களின் கனவுகளால் இயக்கப்படுகிறது, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு வரம்பற்ற வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட்-அப்கள் முதல் விளையாட்டு வரை, நமது இளைஞர்கள் சிறந்து விளங்கும் புதிய எல்லைகளை ஆராய்ந்துள்ளனர்.
புதிய இந்தியாவின் அபிலாஷைகளுக்கு எல்லையற்ற பரிமாணங்கள் உள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதிய உயரங்களை எட்டிக்கொண்டே இருக்கிறது மற்றும் சிறந்த அளவுகோல்களை அமைக்கிறது. இந்த ஆண்டு, இஸ்ரோ சந்திரயான் -3 ஐ விண்ணில் செலுத்தியது, அதன் லேண்டர் ‘விக்ரம்’ மற்றும் ‘பிரக்யான்’ என்ற அதன் ரோவர் அடுத்த சில நாட்களில் நிலவில் தரையிறங்க உள்ளது. இது நம் அனைவருக்கும் ஒரு பெருமையான தருணமாக இருக்கும், நான் அதை எதிர்நோக்குகிறேன். ஆனால் நிலவுக்கான பயணம் நமது எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு ஒரு படிக்கட்டு மட்டுமே. நாம் வெகுதூரம் முன்னேற வேண்டும்.
விண்வெளியிலும் பூமியிலும் அவர்களின் பணிக்காக, நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டிற்கு விருதுகளை கொண்டு வருகிறார்கள். ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் உணர்வை வளர்ப்பதற்காக, அரசாங்கம் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி, ரூ 50000 கோடியை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இந்த அறக்கட்டளை நமது கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை விதைத்து, வளர்க்கும் மற்றும் ஊக்குவிக்கும்.
அன்புள்ள குடிமக்களே,
நம்மைப் பொறுத்தவரை, அறிவியலோ அல்லது அறிவோ முடிவற்றது அல்ல, மாறாக அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்கான வழிமுறையாகும். உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் அவசர கவனத்திற்கு தகுதியான ஒரு விஷயம் காலநிலை மாற்றம் ஆகும். சமீபத்திய ஆண்டுகளில் நாங்கள் பல தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளோம். இந்தியாவின் சில பகுதிகள் அசாதாரண வெள்ளத்தை சந்தித்துள்ளன. அதே நேரத்தில், வறட்சியை எதிர்கொள்ளும் இடங்கள் உள்ளன. இந்த நிகழ்வுகள் புவி வெப்பமடைதல் நிகழ்வு காரணமாகவும் கூறப்படுகின்றன. எனவே, சுற்றுச்சூழலுக்காக உள்ளூர், தேசிய மற்றும் உலக அளவில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முன்னெப்போதும் இல்லாத இலக்குகளை எட்டியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சோலார் கூட்டணிக்கு இந்தியா தலைமை தாங்கி வருகிறது. சர்வதேச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நமது நாடு முன்னணி வகிக்கிறது. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (Life Style for Environment) என்ற மந்திரத்தை உலக சமூகத்திற்கு வழங்கியுள்ளோம்.
அன்புள்ள சக குடிமக்களே,
தீவிர வானிலை நிகழ்வுகள் அனைவரையும் பாதிக்கின்றன. ஆனால் அவற்றின் தாக்கம் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்கள் மீது மிகக் கடுமையாக உள்ளது. குறிப்பாக நகரங்கள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளை அதிக நெகிழ்ச்சியுடன் உருவாக்க வேண்டும்.
பேராசையின் கலாச்சாரம் உலகை இயற்கையிலிருந்து விலக்கிச் செல்கிறது என்பதே இங்கு பெரிய விஷயம். நமது வேர்களுக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தை நாம் இப்போது உணர்கிறோம். இன்னும் பல பழங்குடி சமூகங்கள் இயற்கையோடு மிக நெருக்கமாகவும், அதனுடன் இயைந்தும் வாழ்கின்றன என்பதை நான் அறிவேன். அவர்களின் மதிப்புகள் மற்றும் வாழ்க்கை முறை காலநிலை நடவடிக்கைக்கு விலைமதிப்பற்ற படிப்பினைகளை வழங்குகின்றன.
பழங்குடி சமூகங்கள் காலங்காலமாக உயிர்வாழ்வதன் ரகசியத்தை ஒரே வார்த்தையில் சுருக்கமாகக் கூறலாம். அந்த ஒற்றை வார்த்தைதான் ‘Empathy’. அவர்கள் இயற்கை அன்னையின் சக குழந்தைகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மீது பச்சாதாபம் கொண்டுள்ளனர். எவ்வாறாயினும், சில நேரங்களில் உலகம் பச்சாதாபத்தின் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இத்தகைய காலகட்டங்கள் மாறுபாடுகள் மட்டுமே என்பதை வரலாறு காட்டுகிறது, இரக்கம் நமது அடிப்படை இயல்பு. பெண்களிடம் பச்சாதாபம் அதிகம் என்பதும், மனிதநேயம் வழிதவறும்போது அவர்கள் வழி காட்டுவதும் என் அனுபவம்.
நமது நாடு புதிய தீர்மானங்களுடன் ‘அமிர்த காலத்தில்’ நுழைந்துள்ளது, மேலும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கில் முன்னேறி வருகிறோம். தனிமனிதனின் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிட நமது அடிப்படைக் கடமையைச் செய்ய அனைவரும் உறுதிமொழி எடுப்போம். மற்றும் கூட்டுச் செயல்பாட்டின் மூலம் நாடு தொடர்ந்து முயற்சி மற்றும் சாதனைகளின் உயர் மட்டங்களுக்கு உயர்கிறது.
அன்புள்ள சக குடிமக்களே,
நமது அரசியலமைப்பு நமது வழிகாட்டும் ஆவணம். அதன் முன்னுரையில் நமது சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்கள் உள்ளன. நமது தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களின் கனவுகளை நனவாக்க நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வோடு முன்னேறுவோம்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, உங்களுக்கும், குறிப்பாக எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கும் உள்நாட்டுப் பாதுகாப்பை வழங்கும் காவல்துறையினருக்கும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி. ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!