பலாத்காரத்தின்போது அமைதியாக இருந்திருந்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது: குற்றவாளி முகேஷ் சிங்

இந்தியா

delhi-student-nirbhaya புது தில்லி: நாட்டையே உலுக்கிய தில்லி துணை மருத்துவ மாணவி ‘நிர்பயா’ கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், அந்தப் பெண் பலாத்காரத்தின் போது எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக இருந்திருந்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது என்று ஆணவத்துடன் கூறியுள்ளார் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங். இந்த நிகழ்வை மையப் படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப் படத்துக்காக அவர் கூறிய வார்த்தைகள் இவை. மேலும், பாலியல் பலாத்காரங்களுக்கு பெண்களின் தவறான நடத்தையே காரணம் என அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது தற்போது சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. அந்த ஆவணப் படத்தில் அவர் கூறியிருப்பவை…. ஓர் ஒழுக்கமான பெண் இரவு 9 மணிக்கு மேல் வெளியே சுற்றக் கூடாது. பாலியல் பலாத்காரத்துக்கு அதிக பொறுப்புடையவர்கள் பெண்கள்தான். வீட்டுப் பணிகளைச் செய்வது தான் பெண்களின் கடமை. பார்களுக்கும் டிஸ்கோத்தேக்களுக்கும் செல்வது அவர்களின் செயல் அல்ல… பாலியல் பலாத்காரக் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பது பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். இனி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் ஆண்கள் அந்தப் பெண்களை உயிரோடு விடமாட்டார்கள். முன்பெல்லாம் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் யாரிடமும் அதைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்று எண்ணி அந்தப் பெண்களை அதில் ஈடுபடும் ஆண்கள் விட்டுவிடுவார்கள். ஆனால் இனி அது நடக்காது” என்று முகேஷ் சிங் அந்த ஆவணப் படத்தில் கருத்து கூறியுள்ளார். முகேஷ் சிங்கின் இந்தக் கருத்து, பல்வேறு தரப்பினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்காரச் சம்பவத்தை மையப் படுத்தி, லெஸ்லீ அட்வின் என்பவர் தயாரித்து இயக்கிய ‘ India’s Daughter – இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப் படத்தில் முகேஷ் சிங் இவ்வாறு கூறியுள்ளார். இப்படி ஓர் ஆவணப் படத்தை தான் இயக்கியதற்கான காரணத்தை விளக்கிய லெஸ்லீ அட்வின், இந்தியாவில் பெண்ணுரிமைக்காக நடந்த போராட்டம் தன்னை பிரமிக்க வைத்ததாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பெண் இறந்து போன நேரத்தில், இந்தியாவில் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், லத்தி தாக்குதலையும் பொருட்படுத்தாமல் பெண்களின் உரிமைக்காக ஆயிரக் கணக்கானோர் தேசிய அளவில் நடத்திய போராட்டத்தை நினைவுகூர்ந்த அவர், பெண்கள் உரிமைக்காக இந்தியாவைப் போல வேறு எந்த நாடும் எழுந்து நின்றதாகத் தனக்கு நினைவில்லை என்று கூறியுள்ளார். லெஸ்லீ அட்வின் தயாரித்துள்ள இந்த ஆவணப் படம் சர்வதேச மகளிர் தினமான வரும் மார்ச் 8ஆம் தேதி பிரிட்டனில் தொலைக்காட்சியில் வெளியிடப் படவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.