
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஒன்பதாம் நாள்
வங்கதேசம் vs நியூசிலாந்து
சென்னை – 13.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
வங்கதேச அணியை (245/9, முஷ்ஃபிகுர் ரஹீம் 66, ஷாகிப் அல் ஹசன் 40, மிராஸ் 30, மகமதுல்லா 41*, ஃபெர்கூசன் 3/49, போல்ட் 2/45, ஹென்றி 2/58) நியூசிலாந்து அணி (42.5 ஓவரில் 248/2, டேரில் மிட்சல் 89*, கேன் வில்லியம்சன் 78*, கான்வே 45, முஸ்தாஃபிசுர் ரஹமான் 1/36, ஷாகிப் 1/54) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி வங்கதேச அணியை மட்டையாடக் கேட்டுக்கொண்டது. போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார். வங்கதேச அணி வீரர்களால் அதிரடி ஆட்டம் ஆட முடியவில்லை. சற்று தடுமாற்றமாகத்தான் விளையாடினார்கள். இருப்பினும் இதுவரையில்லாத அளவாக உலகக் கோப்பை ஆட்டங்களில் அதிக பட்சமாக 8 சிக்சர்கள் இன்று அடித்தனர். முஷ்ஃபிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன் இருவரும் 96 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிற வீரர்களால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாததால் 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 245 ரன் எடுத்தது.
பதிலுக்கு ஆட வந்த நியூசிலாந்து அணி தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. முதல் 50 ரன் அடிக்க 74 பந்துகள் எடுத்துக்கொண்டனர். அடுத்த 50 ரன் அடிக்க 52 பந்துகளே தேவைப்பட்டன. இவர்களது இன்னிங்க்ஸில் ஏராளமான டாட் பால்கள்; ஆனால் ஒரு ஓவருக்கு ஒரு ஃபோர் அடித்து ரன்ரேட்டை 4க்கு மேல் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர்.
அணியின் ஸ்கோர் 200 ஆக இருக்கும்போது வில்லியம்சன் காயம் காரணமாக வெளியேறினார். 150 ரன்னிலிருந்து 200 ரன் அடிக்க அவர்கள் 45 பந்துகள் எடுத்துக் கொண்டனர். இறுதியில் 42.5 ஓவரில் 248 ரன் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. லோக்கி ஃபெர்கூசனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
நியூசிலாந்து அணி இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடி, மூன்றிலும் வெற்றி பெர்று 6 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.