
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி பதினோராம் நாள்
ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து
டெல்லி – 15.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஆப்கானிஸ்தான் அணி (49.5 ஓவரில் 284, குர்பாஸ் 80, அலிகில் 58, அதில் ரஷீத் 3/42, மார்க் வுட் 2/50) இங்கிலாந்து அணியை (40.3 ஓவரில் 215 ஆல் அவுட்,ஹாரி ப்ரூக் 66, டேவிட் மலான் 32, முஜிபுர் ரஹ்மான் 3/51, ரஷீத் கான் 3/37) 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து அணியை வென்றது இந்த ஒருநாள் உலகக் கோப்பையின் மிகப்பெரிய அப்செட்; அதிர்ச்சி; இங்கிலாந்து முதல் நான்கு அணிகளுள் ஒன்றாக வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியுற்றுள்ளது.
பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணி, மிகத் தன்னம்பிக்கையோடு ஆப்கானிஸ்தான் அணியை மட்டையாடச் சொன்னது. அந்த அணி அடித்த 284 என்ற ஸ்கோருக்கு எதிராக இரண்டாவதாக விளையாடிய இங்கிலாந்து அணி தடுமாற்றத்துடன் ஆடியது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் (80 ரன்), இக்ரம் அலிகில் (58 ரன்) ஆகியோரைத் தவிர சத்ரன் (28 ரன்), முஜிபுர் ரஹ்மான் (28 ரன், ரஷீத் கான் (23 ரன்) ஆகியோரும் நன்றாக ஆடினர். இதனால் 50 ஓவர் வரை அவர்களால் ஆட முடிந்தது; மேலும் ரன்ரேட்டை 5.69 என்ற நிலையில் அவர்களால் வைக்கமுடிந்தது.
இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்கள் சேர்க்க முடிந்தது.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் போது டேவிட் மலான், ஹாரி ப்ரூக் ஆகியோரைத் தவிர பிறர் சரியாக விளையாட வில்லை. இதனால் 40.3 ஓவரில் இங்கிலாந்து அணி 215 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.
ஆப்கானிஸ்தானுக்கு ஒரு மகத்தான வெற்றி; இங்கிலாந்துக்கு இனிமேல் கவனமாக ஆட ஒரு பெரிய விழிப்புணர்வு அழைப்பு. மூன்று ஆட்டங்களில், இரு அணிகளும் இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இன்னும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதற்கு மேலும் தோல்விகளுக்கு இடமில்லை.
இதற்கு முன்பு இங்கிலாந்து டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்திடம் தோல்வியடைந்த பிறகு இதுபோன்ற சூழ்நிலையில் இருந்தது நினைவிருக்கலாம். ஆனால் அடுத்த சனிக்கிழமை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மோதல் அவர்களுக்குக் கடினமாக இருக்கலாம்.
ஆப்கானிஸ்தானின் அடுத்த ஆட்டம், சென்னையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம். இன்றைய வெற்றியின் பின்னணியில், ஆப்கானிஸ்தான் மீண்டும் தங்கள் வாய்ப்புகளை அதிகரிக்க விரும்பும்.
ஆனால், அதற்கெல்லாம் முன்பாக, தற்போது அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி நாளை பட்டியலில் கீழிருந்து மூன்றாவதாக, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.