
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
18ஆம் நாள் – நியூசிலாந்து vs இந்தியா
தர்மசலா – 22.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
நியூசிலாந்து அணியை (273, டேரில் மிட்சல் 130, ரச்சின் 75, பிலிப்ஸ் 23, ஷமி 5/54, குல்தீப் 2/73) இந்திய அணி (48 ஓவரில் 274/6, ரோஹித் ஷர்மா 46, விராட் கோலி 95, ஷ்ரேயாஸ் ஐயர் 33, ராகுல் 27, ஜதேஜா 39) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியில் இன்று இரண்டு மாற்றங்கள். காயம் காரணமாக ஹார்திக் பாண்ட்யா ஆடவில்லை. அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஆடினார். ஷர்துல் தாகூருக்குப் பதிலாக முகம்மது ஷமி ஆடினார். முகமது ஷமி இன்று ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் உலகக் கோப்பையில் இரண்டு முறை இதைச் செய்த முதல் இந்தியர் ஷமி ஆவார்.
ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இடையே ஒரு அற்புதமான பார்ட்னர்ஷிப் நியூசிலாந்து அணிக்கு அமைந்தது. பும்ரா சில பயங்கர யார்க்கர்கள் வீசினார். 50 ஓவர்களுக்குள் சில சந்தர்ப்பங்களில் ஆட்டம் இந்தியாவுக்குச் சாதகமாகவும், சில சந்தர்ப்பங்களில் நியூசிலாந்துக்குச் சாதகமாகவும் மாறியது.
இறுதியில், கடைசி ஆறு ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் நியுசிலாந்து அணி மோசமாக பாதிக்கப்பட்டது. அவர்கள் நடு ஓவர்களில் உருவாக்கிய முடுக்கத்தைப் இறுதியில் பெறத் தவறிவிட்டனர். அதற்கான பெருமை குல்தீப் யாதவின் வலுவான ரிட்டர்ன் ஸ்பெல்லுக்குச் சேர வேண்டும். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து 8 ஓவரில் 19/2 என்று இருந்தது. பிறகு 33.3 ஓவரில் 3/178 என்ற நிலைக்கு வந்தது. மிட்செல் 130 ரன்கள் அடித்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளும் இழந்து 273 ரன் எடுத்தது.
பின்னர் ஆடவந்த இந்திய அணிக்கு வழக்கம்போல ரோஹித் ஷர்மா அதிரடி தொடக்கம் தந்தார். ஆனால் தனது 50 ரன்னைக்கூட அடிக்காமல், 40 பந்துகளில் 4 ஃபோர், 4 சிக்சர்களுடன் 46 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் விக்கட்டுப்பின்னால் பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து 26 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் (33 ரன்), கே.எல். ராகுல் (27 ரன்) விராட் கோலிக்கு ஜோடியாக ஆடினர். அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் ஆட வந்தார். அவரும் துரதிர்ஷ்ட வசமாக ரன் அவுட் ஆனார்.
பின்னர் ஜதேஜா கோலியுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். கோலி தனது சதத்தைப் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 95 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 48ஆவது ஓவர் முடிவில் இந்திய அணி வெற்றிபெற்றது.
ஐந்து விக்கட்டுகள் எடுத்த முகம்மது ஷமி ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். தற்போது இந்திய அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி அரையிறுதிக்குத் தேர்வாவது ஏறத்தாழ முடிவாகிவிட்டது எனச் சொல்லலாம்.