
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
20ஆம் நாள் – தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம்
மும்பை – 24.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தென் ஆப்பிரிக்க அணி (382/5, க்விண்டன் டி காக் 174, க்ளாசன் 90, ஐடென் மர்கரம் 60, டேவிட் மில்லர் 35, ஹசன் மகமது 2/67) வங்கதேச அணியை (46.4 ஓவரில் 233, மகமதுல்லா 111, கோட்சி 3/62, ஜேன்சன் 2/39, வில்லியம்ஸ் 2/56, ரபாடா 2/42) 149 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் பவுமா ஆடவில்லை. மர்க்ரம் அணித்தலைவராக இருந்தார். வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது க்விண்டன் டி காக் கீப்பிங் செய்யவில்லை. க்ளாசன் கீப்பராக இருந்தார்.
பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. முதல் 10 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டர்கள் அதிரடியாக ஆடினார்கள். அணியின் மொத்த ஸ்கோரான 382இல் டி காக், க்ளாசன், மர்க்ரம், மில்லர் ஆகிய நான்கு பேர் மட்டும் மொத்தம் 354 ரன்கள் எடுத்தனர். கடைசி 10 ஓவர்களில் விளாசித்தள்ளினர்.
இங்கிலாந்தோடு ஆடியபோது கடைசி 10 ஓவர்களில் 143 எடுத்த தென் ஆப்பிரிக்க அணி இன்று 144 ரன் எடுத்தது. டி காக் இன்று இந்த உலகக் கோப்பையின் மூன்றாவது சதத்தை அடித்தார். மர்க்ரம் 10 ரன்னில் தனது சதத்தைக் கோட்டைவிட்டார்.
முதல் 50 ரன்னை 70 பந்துகளில் அடித்த தென் ஆப்பிரிக்க அணி, அடுத்த 50 ரன்னை 52 பந்துகளிலும், 150ஆவது ரன்னை அடுத்த 47 பந்துகளிலும், 200ஆவது ரன்னை அடுத்த 46 பந்துகளிலும், 250ஆவது ரன்னை அடுத்த 33 பந்துகளிலும் 300ஆவது ரன்னை அடுத்த 16 பந்துகளிலும் அடுத்த 38 பந்துகளில் 382 ரன்னும் அடித்தனர்.
மிகக் கடினமான இலக்கை ஆடத் தொடங்கிய வங்கதேச அணி மிக மோசமாக விளையாடியது. ஏழாவது எட்டாவது ஓவர்களில் மூன்று விக்கட்டுகள் விழுந்தன. ரன்ரேட் மிகவும் குறைவாக இருந்தது. கடைசி வரை ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமையவில்லை. ஒருபுறம் மகமதுல்லா (111 பந்துகளில் 111 ரன், 4 சிக்சர், 11 ஃபோர்) நிலைத்து ஆடிக் கொண்டிருக்க மறுபுறம் வங்கதேச வீரர்கள் அட்டமிழந்துகொண்டே இருந்தனர்.
இறுதியில் 46.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 233 ரன்கள் மட்டுமே எடுத்து தோவியைத் தழுவியது.
ஆட்ட நாயகனாக க்விண்டன் டி காக் அறிவிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்க அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் அதிகமான ரன்ரேட்டுடன் (2.370) இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.
நாளை ஆஸ்திரேலியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையே டெல்லியில் ஆட்டம் நடைபெற உள்ளது.