
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
22ஆம் நாள் – இங்கிலாந்து vs இலங்கை
பெங்களூரு – 26.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து அணியை (33.2 ஓவரில் 156, ஜானி பெயர்ஸ்டோ 30, டேவிட் மலான் 28, பென் ஸ்டோக்ஸ் 43, லஹிரு குமாரா 3/35, ரஜிதா 2/36, மேத்யூஸ் 2/14) இலங்கை அணி (25.4 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 160, பதுன் நிசாங்கா 77, சமரவிக்ரமா 65) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
சென்ற உலகக் கோப்பையை வென்ற அணியா இது? இந்த வருடம் நிச்சயமாக அரையிறுதிக்கு வரும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட அணியா இது? நம்ப முடியவில்லை. இன்று பெங்களூருவில் இங்கிலாந்து அணி அப்படியொரு மோசமான ஆட்டம் ஆடியது. பூவாதலையா வென்று மட்டையாடத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள் ஜானி பெயர்ஸ்டோ (30 ரன்), டேவிட் மலான் (28 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களம் இறங்கிய ஜோ ரூட் மூன்று ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் ஆட வந்த பென் ஸ்டோக்ஸ் 43 ரன் எடுத்தார். இவர்களைத் தவிர மற்ற இங்கிலாந்து அணி வீரர்கள் “வந்தார்கள்-போனார்கள்” கதைதான். 50 ஓவர்கள் முழுமையாகக் கூட விளையாடவில்லை.
33.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 156 ரன் மட்டுமே இங்கிலாந்து அணியால் எடுக்க முடிந்தது. இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் ஒருவர் கூட 10 ஓவர் வீசி முடிக்கவில்லை. காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் மத்தீஸா பதிரனாவுக்குப் பதிலாக இன்று ஆடிய ஆஞ்சலா மேத்யூஸ் 5 ஓவர் வீசி, அதில் ஒரு மெய்டன் ஓவரும் வீசி, 14 ரன் கொடுத்து 2 விக்கட்டுகள் வீழ்த்தினார்.
பதிலுக்கு இலங்கை அணி அருமையாக ஆடியது. சதீரா மற்றும் நிசாங்கா இருவரும் ஆட்டமிழக்காமல் 137 ரன்களை ஒன்றாக சேர்த்தனர். இறுதியில் இலங்கை அணி 25.4 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 160 ரன் எடுத்து எளிதில் வென்றது. குசல் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் இருவரையும் ஆரம்பத்திலேயே இழந்தபோது, துரத்தலில் சில கவலைகள் ஏற்பட்டிருக்கும்.
மேலும் 2 விக்கெட்டுக்கு 26 என்ற நிலையில் இங்கிலாந்து ஒருவேளை வெற்றிக்கு வாய்ப்பிருக்குமோ என நினைத்திருக்கலாம். ஆனால் நிசங்காவும் சதீராவும் இந்த துரத்தலை எளிதாக வழிநடத்தியதால், அத்தகைய எண்ணங்களை விரைவாக இங்கிலாந்து அணி இழந்தது. இருப்பினும் இலங்கை அணியின் வெற்றியை பந்துவீச்சாளர்கள் அமைத்தனர்.
இந்த மைதானம் பந்து வீச்சுக்கு உகந்த மைதானம் அல்ல. ஆங்கில பானியில் சொல்வதானால் இந்த பிட்ச் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பிட்ச் அல்ல. ஆனால் இலங்கையின் இறுக்கமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகியவற்றை பாராட்டியே ஆகவேண்டும்.
லஹிரு குமாரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இனிவரும் நாலு ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறலாம்.
இலங்கை அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணியும் வருகின்ற நாலு ஆட்டங்களில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குத் தேர்வாகலாம்.
நாளை சென்னையில் பாகிஸ்தானுக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்குமான ஆட்டம் நடைபெறவுள்ளது.