
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
33ஆம் நாள் – இலங்கை vs வங்கதேசம்
டெல்லி – 06.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இலங்கை அணியை (49.3 ஓவரில் 279, சரித் அசலங்கா 108, பதுன் நிசாங்கா 41, சமரவிக்ரமா 41, தனஞ்சயா டி சில்வா 34, சாகிப் 3/80, ஷகிப் அல் ஹசன் 2/57, ஷோரிஃபுல் இஸ்லாம் 2/51) வங்கதேச அணி (41.1 ஓவர்களில் ஏழு விக்கட் இழப்பிற்கு 282, ஷண்டோ 90, ஷாகிப் அல் ஹசன் 82, லிட்டன் தாஸ் 23, மகமத்துல்லா 22, திஷன் மதுஷங்கா 3/69, மஹீஷ் தீக்ஷணா 2/44, ஆஞ்சலோ மேத்யூஸ் 2/39) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற வங்கதேச அணி இலங்கை அணியை மட்டையாடச் சொன்னது. தொடக்க வீரர்களில் ஒருவரான குசல் பெரேரா முதல் ஓவரில் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவருக்குப் பதிலாக ஆடவந்த, அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 12ஆவது ஓவரில் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பதுன் நிசாங்கா அடுத்த ஓவரில் 41 ரன்னுக்கு அவுட் ஆனார். பின்னர் சதீர சமரவிக்ரமா மற்றும் சரித் அசலங்கா இருவரும் நிலைத்து ஆடினர். 25ஆவது ஓவரில் சமரவிக்ரமா ஆட்டமிழக்க, ஒரு பந்து கூட ஆடாமல் ஆஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்தார்.
‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர்
கிரிக்கட் விளையாட்டில் விநோதமான முறையில் ஆட்டமிழலஆட்டமிழப்பவர்கள் உண்டு. முக்கியமாக பந்தை கையால் தடுத்தல் (இந்தியாவின் மொஹிந்தர் அமர்நாத் இம்முறையில் ஆட்டமிழந்தவர்), ஆட்டமிழக்காமல் இருப்பதற்காக ஃபீல்டரைத் தடுத்தல், பந்தினை இரண்டு முறை அடித்தல் ஆகியவாற்றைச் சொல்லலாம். இன்று மேத்யூஸ் தாமதமாக விளையாடியதால் ‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார்.
மேத்யூஸ் சமரவிக்ரமா ஆட்டமிழந்ததும் மைதானத்திற்குள் வந்துவிட்டார். கீரிஸில் நின்று பந்தைச் சந்திக்கும் முன் தனது ஹெல்மெட் சரியில்லாமல் இருப்பதைக் கண்டார். புது ஹெல்மெட்டைக் கொண்டுவரச் சொன்னார். அதற்குள் டைம் ஆகிவிட்டது. ஒரு பேட்டர் ஆட்டமிழந்து அடுத்த 2 நிமிடத்திற்குள் புதிய பேட்டர் அடுத்த பந்தைச் சந்திக்க வேண்டும். மேத்யூஸிற்கு அதற்கு மேல் நேரம் ஆகிவிட்டது.
வந்ததேச அணியின் அணித்தலைவர் அவுட் கேட்டார். அம்பயர் கொடுத்துவிட்டார். விதிப்படி எல்லாம் சரி. ஆனால் மேத்யூஸிற்கு அதிக கோபம் வந்துவிட்டது. மைதான எல்லைக் கோட்டைத் தாண்டும்போது அவர் தனது ஹெல்மட்டைத் தூக்கிப்போட்டார்.
அதன் பிறகு சரித் அசலங்கா, டி சில்வா, தீக்ஷணா ஆகியோரின் ஆட்டத்தால் இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 279 ரன் எடுத்தது.
தொடர்ந்து ஆடவந்த வங்கதேச அணியில் ஷண்டோ (90 ரன்), ஷாகிப் அல் ஹசன் (82 ரன்) இருவரும் சிறப்பாக ஆடியதால் அணியின் ஸ்கோர் 33.3 ஓவரில் 211/4 என்ற நிலைக்கு வந்தது. ஷாகிப் அல் ஹசன் விக்கட்டை ஆஞ்சலோ மேத்யூஸ் எடுத்தார். அவர் மைதானத்தை விட்டு வெளியேறும்போது மேத்யூஸ் டைம் அவுட் என்பது போல தன் வாட்சைக் காண்பித்தார்.
இதற்காக மேத்யூஸுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பிருக்கிறது. அதற்குப் பிறகு மூன்று விக்கட்டுகள் விழுந்த போதும் வங்கதேச அணி நல்ல ரன் ரேட் பராமரித்து வந்ததால் 41.1 ஓவர்களில் ஏழு விக்கட்டு இழப்பிற்கு 282 ரன் அடித்து வெற்றிபெற்றது. ஷாகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த ஆட்டத்திற்குப் பின்னர் வங்கதேச அணி (வெற்றி பெற்றிருந்தபோதும்) இலங்கை அணி இரண்டும் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துவிட்டன. வங்கதேச அணி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்குத் (முதல் ஏழு அணிகள் தகுதி பெறும் என்பதால்) தகுதி பெற்றிருக்கிறது.