
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
34ஆம் நாள் – ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா
மும்பை – 07.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஆப்கானிஸ்தான் அணியை (291, இப்ராஹிம் சத்ரன் 129*, ரஷீத் கான் 35*, ரஹ்மத் ஷா 30, ஷஹீதி 26, ஹேசல்வுட் 2/39) ஆஸ்திரேலிய அணி (46.5 ஓவர்களில் 293/7, கிளன் மேக்ஸ்வெல் 201*, நவீன் உல் ஹக் 2/40, ஒமர்ஜாய் 2/37, ரஷீத் கான் 2/40) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (21 ரன்) 8 ஓவர்கள் வரை விளையாடி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 129 ரன் அடித்தார். ரஹ்மத் ஷா (30 ரன்), ஷஹீதி (26 ரன்), ஒமர்ஜாய் (22 ரன்), நபி (12 ரன்), ரஷீத் கான் (ஆட்டமிழக்கமல் 35 ரன்) என சத்ரனுக்கு துணைநின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 291 ரன் அடித்தது.
பதிலுக்கு ஆடவந்து ஆஸ்திரேலிய அணியின் விக்கட்டுகள் தொடக்கம் முதல் மளமளவெனச் சரிந்தன. 18.3 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 91 ரன் அடுத்து வெற்றிக்கு வாய்ப்பில்லை என்ற நிலைக்கு ஆஸ்திரேலிய அணி வந்தது. அதன் பின்னர் கிளன் மேக்ஸ்வெல் பேயாட்டம் ஆடினார்; 128 பந்துகளில் 201 ரன்; 10 சிக்சர், 21 ஃபோர். அவருடன் பேட் கம்மின்ஸ் (68 பந்துகளில் 12 ரன்) துணைநின்றார். மேக்ஸ்வெல் முதல் 51 பந்துகளில் 50 ரன் அடித்தார்; அடுத்த 25 பந்துகளில் சத்தத்தை நிறைவு செய்தார்; அடுத்த 28 பந்துகளில் 150 ரன்; அடுத்த 24 பந்துகளில் 200 ரன். மேக்ஸ்வெல் 27 ரன்னில் இருக்கும்போது எல்.பி. டபில்யூ கேட்கப்பட்டது; மேக்ஸ்வெல் ரிவ்யூ செய்தார்: மூன்றாவது அம்பயர் அவுட் இல்லை எனச் சொல்லிவிட்டார். இறுதியில் 46.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
12 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. அரையிறுதிக்கு அந்த அணி தகுதிபெற்றுவிட்டது. இப்போது நாலாவது இடத்திற்கான அணி எது என்பது இனி முடிவாகும். நாளை புனேயில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளின் ஆட்டம் நடைபெறும்.
மீதமுள்ள ஆட்டங்கள்
- 09 நவம்பர் – நியூசிலாந்து vs இலங்கை;
- 10 நவம்பர் – ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா;
- 11 நவம்பர் – இங்கிலாந்து vs பாகிஸ்தான்;
- 12 நவம்பர் – இந்தியா vs நெதர்லாந்து.