
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
முதல் அரையிறுதிப்போட்டி
இந்தியா vs நியூசிலாந்து, மும்பை – 15.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (397/4, விராட் கோலி 117, ஷ்ரேயாஸ் ஐயர் 105, ஷுப்மன் கில் 80*, ரோஹித் ஷர்மா 47, கே.எல்.ராகுல் 39*, டிம் சௌதீ 3/100, போல்ட் 1/86) நியூசிலாந்து அணியை (48.5 ஓவர்களில் 327, டேரில் மிட்சல் 134, கேன் வில்லியம்சன் 69, கிளன் பிலிப்ஸ் 41, ஷமி 7/57, பும்ரா 1/64, சிராஜ் 1/78, குல்தீப் 1/56) 70 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ரோஹித் ஷர்மா ஒன்பதாவது ஓவரில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த உலகக் கோப்பை ஆட்டங்களில் அவர் எடுத்துள்ள ரன்கள் – ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பூஜ்யம், ஆப்கானிஸ்தனிற்கு எதிராக 131, பாகிஸ்தானிற்கு எதிராக 86, நியூசிலாந்திற்கு எதிராக 46, இங்கிலாந்திற்கு எதிராக 87, இலங்கைக்கு எதிராக 4, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 40, நெதர்லாந்திற்கு எதிராக 61, இந்த ஆட்டத்த்ல் 47.அவர் தன்னுடைய தொடக்கங்களை பெரிய ஸ்கோராக மாற்ற சிரமப்படுகிறார். பிற பேட்டர்கள் சிறப்பாக ஆடுவதால் அணி வெற்றி பெறுகிறது.
இன்றைய ஆட்டத்திலும் விராட் கோலி 117 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 105, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 80, ராகுல் ஆட்டமிழக்காமல் 39 ரன் அடித்ததால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் நாலு விக்கட் இழப்பிற்கு 397 ரன் எடுத்தது.
இதன் பின்னர் ஆடவந்த நியூசிலாந்து அணிக்கு மூன்று வீரர்கள் மட்டுமே சிறப்பாக ஆடினர். டேரில் மிட்சல் 117 ரன். கேன் வில்லியம்சன் 69 ரன், கிளன் பிலிப்ஸ் 41 ரன் அடித்தனர். பிறர் சரியாக ஆடவில்லை. பந்துவீச்சில் சற்று திணறிவந்த இந்திய அணிக்கு முகம்மது ஷமி 9 ஓவர் வீசி 78 ரன்கள் கொடுத்து 7 விக்கட்டுகள் எடுத்தார். இதனால் 48.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 327 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. முகம்மது ஷமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
விராட் கோலி ஒருநாள் கிரிக்கட் போட்டியில் தனது 50ஆவது சதத்தை அடித்து சச்சின் சாதனையைக் கடந்தார். ஷமி இன்று 7 விக்கட்டுகள் எடுத்து ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் 50 விக்கட்டுகள் எடுத்த வீரரானார். குல்தீப் யாதவ் இன்று 41 மற்றும் 43ஆவது ஓவர்களை வீசியது ஒரு ஆச்சர்யமான விஷயம். நியூசிலாந்து அணி ஆடும்போது 33ஆவது ஓவரிலிருந்து 37ஆவது ஓவர் வரை இந்தியப் பந்துவீச்சாளர்கள் வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்தனர்.
விராட் கோலி இதுவரை 674 ரன்கள் அடித்து சச்சினின் சாதனையான 673 ரன்னைக் கடந்தார். இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் ரோஹித் ஷர்மா 550 ரன்கள் அடித்திருக்கிறார். அதில் 226 ரன்கள் முதல் 20 ஓவர்களில் வந்திருக்கிறது. இன்று ரோஹித் ஷர்மா 4 சிக்சர்கள் அடித்தார். இத்துடன் உலகக்கோப்பை போட்டிகளில் 50 சிக்சர்களை அடித்து கிரிஸ் கெயிலின் சாதனையக் கடந்தார்.
நாளை ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகளிடையே கொல்கொத்தாவில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடக்க உள்ளது.