9. கொனார்க் சூரியன் கோயில்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
தொஹிலி மலையில் இருந்து கொனார்க் சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காரில் செல்வதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகும். கொனார்க் கோவிலில் இருந்து கடற்கரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கொனார்க் கோயில் எப்போதும் வெளிநாட்டுப் பயணிகளால் நிரம்பி வழியும். நான் சென்றிருந்த போதும் அப்படித்தான் கூட்டமாக இருந்தது. கோயில் வாசலில் சக்கர நாற்காலியும் அதைத் தள்ளுவதற்கு ஆட்களும் கிடைப்பார்கள்.
சூரிய வழிபாடு
நம் முன்னோர்கள் பண்டைக் காலத்தில் தெய்வமாக வழிபட்டார்கள். ஆதி சங்கரர் உருவாக்கிய ஷண்மதங்களில் ‘சௌரம்’ எனப்படும் சூரிய வழிபாட்டு மதமும் ஒன்று. மனுஸ்மிருதியில்
अग्नौ प्रास्ताहुतिः सम्यगादित्यं उपतिष्ठते ।
आदित्याज्जायते वृष्टिर्वृष्टेरन्नं ततः प्रजाः 3/76
அக்னோ ப்ரஸ்தாஹிதி: ஸம்யகாதித்யம் உபதிஷ்டதே
ஆதித்யாத் ஜாயதே விருஷ்டிர் அன்னம் தத: ப்ரஜா:
(மனுஸ்ம்ருதி, மூன்றாம் பாகம், 76ஆவது பாடல்)
என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்னவெனில் – அக்னியில் சூரியனுக்கு ஆஹூதி தருகிறோம். இந்த ஆஹூதி சூரியனுக்குச் செல்கிறது. சூரியன் மழையைப் பொழிவிக்கிறான். அதனால் தானியங்கள் விளைகின்றன. இந்தத் தனியங்களால் மக்கள் வாழ்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதானால் சூரியன் உலகை வாழ்விக்கிறான். சூரியனே இவ்வுலகைக் காக்கிறான்.
கம்பர் தன்னுடைய இராமயணத்தில், பால காண்டத்தில், அரசியற்படலத்தில் ஓர் பாடலில் இக்கருத்தைக் குறிப்பிடுகிறார். பாடல் இதோ
குன்றென உயரிய குவவுத் தோளினான்.
வென்றிஅம் திகிரி. வெம் பருதியாம் என.
ஒன்றென உலகிடை உலாவி. மீமிசை
நின்று. நின்று. உயிர்தொறும் நெடிது காக்குமே.
பாடலின் பொருள் – மலைபோலும் வளர்ந்து ஓங்கிய திரண்ட தோள்கள் கொண்ட தயரதனுடைய வெற்றிமிக்க ஆணைச் சக்கரமானது வெம்மையுடைய சூரியனோ என்னும்படி மிக உயரமான வானிலே நின்றும் ஒன்றாகிய பரம்பொருளைப் போல உலகில் வாழும் சல, அசலங்களாகிய உயிர்கள் தோறும் உலாவி நின்று பெரிதும் காத்தல் தொழிலைச் செய்யும்.
இதன் உட்பொருள் என்னவெனில் “சூரியனுடைய சக்தியே அசைகின்ற மற்றும் அசையாத உயிர்கள் இடத்தில் நின்று உலகைக் காக்கிறது. அதுபோல தசரதன் தன்னுடைய புஜபல பராக்கிரமத்தினால் அதாவது ஆற்றலினால் உலகைக் காக்கிறான்” என்பதாகும். இவ்வாறு சூரிய வழிபாடு மிகப் பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் உள்ளது.
யுனஸ்கோ அங்கீகரித்த இடம்
பலரையும் வியக்க வைத்த இந்த கொனார்க் சூரிய கோயிலை, 1984ஆம் ஆண்டு நடைபெற்ற 8ஆவது யுனெஸ்கோ மாநாட்டில் கலாசாரம், நாகரிகம், பாரம்பரியம், தனித்துவம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 1, 3 மற்றும் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் கொனார்க் சூரிய கோயில் சேர்க்கப்பட்டது.
வரலாறு
13ஆம் நூற்றாண்டு காலம் அது. துருக்கி பழங்குடி மக்கள், ஹிந்துகுஷ் மலையைக் கடந்து இந்தியா வந்து, சிந்து – கங்கை நதிகளுக்கு இடைப்பட்ட நிலத்தில் தங்கள் ஆட்சியை ஓரளவு நிலைநிறுத்தி ஒரு நிலையான ஆட்சி புரிந்துக்கொண்டிருந்த காலம். மம்லுக் வம்சத்தைச் சேர்ந்த இல்துமிஷ்-ன் ஆட்சிக்குப் பிறகு, அவரது மகள் ரஸியா பேகம் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கப்பட, அவரது மகன்களுள் ஒருவரான ருகுன்-வுட்-டின் பெரோஸ் போன்ற சில திறனற்ற ஆட்சியாளர்கள் இருந்த காலம். 11ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை இன்றைய ஒடிசா, வங்காளம், சத்தீஸ்கர், வட ஆந்திரா மாநிலங்களை உள்ளடக்கிய மகாநதி – கோதாவரி நதிகளுக்கிடையேயுள்ள நிலப்பகுதிகளைக் கீழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி புரிந்துவந்தனர். இதிலுள்ள திரிகலிங்கர்கள் பிரிவைச் சேர்ந்தவர் முதலாம் நரசிம்ம தேவர். இவர், பீகார் மற்றும் வங்காளத்தை சுல்தானியர்களிடமிருந்து கைப்பற்றியதன் நினைவாக, ஒரு நினைவு கட்டடம் எழுப்ப நினைத்தார்.
சூரிய பகவான் மேல் கொண்ட பக்தியினால், சூரிய கோயில் எழுப்ப முடிவு செய்தார். ஒடியா புராணக் கதையின்படி, கோயிலைக் கட்டும் பணிக்காக, சிறந்த கட்டிட நிபுணரான ‘பிஷு மஹாராணா‘வை நரசிம்ம தேவர் நியமித்தார். 12 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 1200 பணியாட்களோடு நடைபெற்ற கட்டுமான பணியானது சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்றது. நரசிம்ம தேவரின் கட்டளைப்படி 12 வருடங்களுக்குள் கோயிலைக் கட்டிமுடிக்க வேண்டும். ஆனால், கோயில் கட்டும் பணி, முடியும் நிலைக்கு வந்த பின்னரும், பணியாளர்களின் உடல் எடை காரணமாக கோயிலின் மேல் கலசத்தை வைக்க முடியவில்லை.
கடைசி நாள் வந்துவிட்டதால், மறுநாள் காலைக்குள் பணியை முடிக்காவிடில், 1200 பேரையும் தூக்கிலிடுவதாக நரசிம்ம தேவர் உத்தரவிட்டார். கோயில் கட்டும் பணி தொடங்கியபோது, பிஷு மஹாராணாவுக்கு தர்மபாதர் என்ற குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்ததிலிருந்து 12 வருடங்களாக குழந்தையைப் பார்க்கவில்லை. 12 வருடங்களுக்குப் பிறகு தந்தையைப் பார்க்க வந்த மகன், 1200 பேரையும் மீட்க, கலசத்தை (கிரீடத்தை) கோயிலின் உச்சியில் வைத்து கட்டுமான பணியை நிறைவு செய்தான். அவர்களுக்கு பதிலாக ஒரு குழந்தை பணியை முடித்ததால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும், எனவே தர்மபாதரைக் கொல்லும்படி பிஷு மஹாராணாவை அனைவரும் கேட்டுக்கொண்டனர். இதற்கு அவர் கடுமையாக எதிர்த்தாலும், அவர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தர்மபாதர், கலசம் வைக்கப்பட்ட இடத்திலிருந்து கடலில் குதித்து தன்னுயிரை நீத்து, தந்தையையும், பணியாளர்களின் உயிரையும் மீட்டார் என ஒடியா புராணக் கதையில் கூறப்படுகிறது.
அதற்குப்பின், 1508இல் சுல்தான் சுலைமான் போர் தொடுத்து வந்தபோது முக்கிய கருவறையும் இதர இந்து கோயில்களும் சேதப்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது. 15ஆவது மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பல முறை பல்வேறு படைகளால் இக்கோயில் சூறையாடப்பட்டதாக நூல்கள் கூறுகின்றன. இதையடுத்து, புயல், அரிப்பு காரணமாகவும், கலசத்தின் எடை அதிகமான காரணமாகவும் கட்டடம் சரிந்துள்ளது. புதர் மண்டிய நிலையிலிருந்த கோயில் 1,800களில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கத் தொடங்கினர். தற்போது, இந்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.