— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பதினெட்டாம் நாள்:
ஐபிஎல் 2024 – – சென்னை
கொல்கொத்தா நைட் ரைடர் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
கொல்கொத்தா அணியை (137/9, ஷ்ரேயாஸ் ஐயர் 34, சுனில் நரேன் 27, ரகுவன்ஷி 24, துஷார் தேஷ்பாண்டே 3/33, ஜதேஜா 3/18) சென்னை அணி (17.4 ஓவரில் 141/3 ருதுராஜ் கெய்க்வாட் 67*, ஷிவம் துபே 28, மிட்சல் 25, ரச்சின் ரவீந்த்ரா 15, வைபவ் அரோரா 2/28, சுனில் நரேன் 1/30) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. கொல்கொத்தா அணி தொடக்கம் முதலே தடுமாறியது. சென்ற ஆட்டத்தில் 272 ரன் அடித்த அணியா இது? என நினைக்கத்தூண்டும் வகையில் அவர்களின் ஆட்டம் இருந்தது. பில் சால்ட் முதல் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆனார். பவர்ப்ளே முடிவில் (அதாவது 6.1ஆவது ஓவரில்) அங்கிருஷ் ரகுவன்ஷி 18 பந்துகளில் 24 ரன் அடித்து ஆட்டம் இழந்தார். சுனில் நரேன் 20 பந்துகளில் 27 ரன் அடித்து 6.5ஆவது ஓவரில் அவுட்டானார்.
அதன் பின்னர் வெங்கடேஷ் ஐயர் (3 ரன்), ரமன்தீப் சிங் (13 ரன்), ரிங்கு சிங் (9 ரன்), ஆண்ட்ரூ ரசல் (10 ரன்) ஸ்டார்க் (பூஜ்யம்) ஆகியோர் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 19.1 ஓவர் வரை ஆடியும் அதிரடியாக ஆட முடியவில்லை. அவர் 32 பந்துகளில் 34 ரன் எடுத்தார். இவ்வாறு தட்டுத்தடுமாறி 20 ஓவரில் கொல்கொத்தா அணி 9 விக்கட் இழப்பிற்கு 137 ரன் எடுத்தது. ரவீந்தர் ஜதேஜா மிகச் சிறப்பாக பந்துவீசினார் (4 ஓவர், 18 ரன், 3 விக்கட்).
138 ரன் என்ற சுலபமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த சென்னை அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 3.2ஆவது ஓவரில் 15 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் அணித்தலைவருமான ருதுராஜ் கெய்க்வாட் இறுதி வரை ஆடி 67 ரன்கள் சேர்த்தார். டேரில் மிட்சல் 19 பந்துகளில் 25 ரன்னும் ஷிவம் துபே 18 பந்துகளில் 28 ரன்னும் அடித்தனர்.
தோனி கடைசி 3 பந்துகளுக்காக மைதானத்திற்கு பேட்டிங் செய்ய வந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார். கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் எவரும் சொல்லிக்கொள்ளும்படி பந்துவீசவில்லை.
அணியின் ரவீந்த்ர ஜதேஜா தன்னுடைய சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை முல்லன்பூரில் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.