அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும்: தில்லி உயர் நீதிமன்றம்

Published:

arvind kejriwal - 2026
#image_title

அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது தில்லி உயர்நீதிமன்றம்.

  • ▪️ குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டப்பூர்வமாக மட்டுமே அணுக முடியும், தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வாதத்தை ஏற்க முடியாது
  • ▪️ சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டம் என இருவேறு நீதியை நீதிமன்றம் கடைபிடிக்க முடியாது
  • ▪️ அரசியல் காரணங்களை நீதிமன்றத்தின்முன் வாதமாக முன்வைக்க முடியாது
  • ▪️ இந்த வழக்கு அமலாக்கத்துறை மற்றும் கெஜ்ரிவாலுக்கு இடையிலானதே தவிர, மத்திய அரசுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான மோதல் அல்ல
  • ▪️ அமலாக்கத்துறையிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. கைதை ரத்து செய்ய முடியாது- நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா.

மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் தில்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. ஒரு வாரம் அமலாக்கத்துறை காவலில் இருந்த பிறகு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

அமலாக்கத் துறை காவலுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். மேலும், ஜாமின் கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அதன் நிறைவில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. 

அதன்படி இன்று அரவிந்த் கெஜ்ரிவால் மனு மீது தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில்,  

தில்லி மதுபானக் கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கியப் பங்காற்றியுள்ளார். அதில் கெஜ்ரிவாலின் பங்கு இருப்பது அமலாக்கத் துறை ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது. அப்ரூவரின் வாக்குமூலத்தை சந்தேகிப்பது நீதிபதி, நீதிமன்றத்தின் மீது பழி சுமத்துவதாகிவிடும். யார் யாருக்கு தேர்தல் பத்திரத்தை வழங்கியுள்ளனர் என்பது குறித்து ஆராய வேண்டிய அவசியம் இந்த நீதிமன்றத்துக்கு இல்லை. 

காணொலியில் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி விசாரிப்பது என்பதை குற்றம் சாட்டப்பட்ட நபர் முடிவு செய்ய முடியாது. முதல்வர் என்பதால் தனிச்சலுகை அளிக்க முடியாது. 

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

மக்களவைத் தேர்தல் குறித்து கெஜ்ரிவாலுக்கு முன்பே நன்கு தெரியும். தேர்தலை முன்னிட்டு அமலாக்கத் துறை கைது செய்துள்ளதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அரசியலுக்கு அல்ல.

அரசியல் காரணங்களைப் பரிசீலிக்க முடியாது. தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலானது அல்ல. 

அரசியலமைப்பு சாசன அறம் குறித்தே நீதிமன்றத்தின் கவலை, அரசியல் அறம் குறித்து அல்ல. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்ட விரோதம் அல்ல என்பதால் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிரான மனுவம் தள்ளுபடி செய்யப்படுகிறது – என்று உயர் நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது ஆம் ஆத்மி தரப்பு!

Related articles

Recent articles

spot_img