- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இருபத்தியொன்றாம் நாள்
ஐபிஎல் 2024 – 11.04.2024 – மும்பை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ்
யப்பா என்னா அடி!
பெங்களூரு அணியை (196/8, டியு பிளேசிஸ் 61, ரஜத் படிதர் 50, தினேஷ் கார்த்திக் 53*, பும்ரா 5/21) மும்பை அணி (199/3, இஷான் கிஷன் 69, சூர்யகுமார் யாதவ் 52, ரோஹித் ஷர்மா 38, ஹார்திக பாண்ட்யா 21*, திலக்வர்மா 16) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று மும்பையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான விராட் கோலி (3 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டியூ பிளேசிஸ் 16.4 ஓவர் வரை விளையாடி 61 ரன்கள் (40 பந்துகள் 4 ஃபோர், 3 சிக்சர்) சேர்த்தார். இவரைத்தவிர ரஜத் படிதர் (26 பந்துகளில் 50 ரன் 3 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் தினேஷ் கார்த்திக் (23 பந்துகளில் 53 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். பிற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 196 ரன் எடுத்தது. மும்பை அணியின் பும்ரா 21 ரன் கொடுத்து 5 விக்கட் எடுத்தார்.
197 ரன் என்ற இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த மும்பை அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் (34 பந்துகளில் 69 ரன், 7 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (24 பந்துகளில் 38 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) அணிக்கு பிரமாதமான தொடக்கம் தந்தனர். பவர்பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் விக்கட் இழப்பின்றி இருவரும் 72 ரன் சேர்த்தனர். இஷான் கிஷன் 9ஆவது ஓவரில் ஆட்டமிழக்க ரோஹித் 12ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் (19 பந்துகளில் 52 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) பெங்களூரு அணி பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார். அவர் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் அவுட்டாகும்போது மும்பை அணி வெற்றி பெற 21 ரன்கள் தேவைப்பட்டன. அதனை அடுத்த 12 பந்துகளில் திலக் வர்மாவும் ஹார்திக் பாண்ட்யாவும் எடுத்தனர். மும்பை அணி 15.3 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 199 ரன் எடுத்து வெற்றிபெற்றது.
மும்பை அணியின் ஜஸ்பிரீத் பும்ரா தன்னுடைய சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை லக்னோவில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
11.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
ராஜஸ்தான் | 5 | 4 | 1 | 8 | 0.871 |
கொல்கொத்தா | 4 | 3 | 1 | 6 | 1.528 |
லக்னோ | 4 | 3 | 1 | 6 | 0.775 |
சென்னை | 5 | 3 | 2 | 6 | 0.666 |
ஹைதராபாத் | 5 | 3 | 2 | 6 | 0.344 |
குஜராத் | 6 | 3 | 3 | 6 | -0.637 |
மும்பை | 5 | 2 | 3 | 4 | 0.073 |
பஞ்சாப் | 5 | 2 | 3 | 4 | -0.196 |
பெங்களூரு | 6 | 1 | 5 | 2 | -1.124 |
டெல்லி | 5 | 1 | 4 | 2 | -1.370 |