சென்னை: சமூக வலைதளங்கள் மற்றும் இணையதள பக்கங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களை நம்பி, பலர் ஏமாந்து வருகின்றனர்.
பல முன்னணி நிறுவனங்கள், ‘ஆன்லைன்’ வாயிலாக தங்களது நிறுவனங்கள் தொடர்பான விளம்பரங்களை, ‘டிஜிட்டல்’ விளம்பரம் செய்து வருகின்றன.
இது போன்று விளம்பரம் செய்ய, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் இணையதள பக்கங்களில், வேலை, கடன் வசதி, குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் என, பல வகைகளில் மோசடி கும்பல்கள், போலி டிஜிட்டல் பக்கங்களை உருவாக்கி, விளம்பரங்கள் செய்ய துவங்கி விட்டன.
விபரம் தெரியாத மக்களும், அவற்றை உண்மை என நம்பி, போலி விளம்பரங்களின், ‘லிங்க்’ பயன்படுத்தி, பணம் கட்டி ஏமாந்து வருகின்றனர்.
குறிப்பாக, இறக்குமதி செய்யப்பட்ட வாசனை திரவியங்கள், மொபைல் போன் உதிரிபாகங்கள், பிரபல பிராண்ட் காலணிகள் என, பல பொருட்கள் 50 முதல் 90 சதவீதம் வரை எங்களிடம் கிடைக்கும் எனக்கூறி, போலி விளம்பர கும்பல் ஏமாற்றி வருகிறது.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
பிரபல வாட்ச் நிறுவனத்தின் பெயரில் பேஸ்புக்கில் விளம்பரம் வந்தது. அதில், தள்ளுபடி விலை என்று கூறப்பட்டிருந்தது. குறைந்த விலையில் கிடைக்கிறது என நம்பி பணம் செலுத்தினோம். ஐந்து நாட்கள் கழித்து, அதே நிறுவன பக்கத்தில் பார்த்த போது, அது போலி என்று தெரிய வந்தது.
மோசடி கும்பல் பயன்படுத்திய மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.
இனி சமூக வலைதளங்களில் வரும் விளம்பரத்தை நம்பி பொருட்கள் வாங்கும் போது, எச்சரிக்கையுடன் உண்மை தன்மையை பார்த்து வாங்க வேண்டும்.
டிஜிட்டல் விளம்பரங்களுக்கான கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி கண்காணித்தால் மட்டுமே, இம்மாதிரியான மோசடியை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.