குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பதிலடி கொடுத்து ஆக்ரோஷமாக காங்கிரஸின் இரட்டை வேடத்தையும் நாட்டுக்கு எதிரான அதன் செயல்களையும் பற்றி பேசினார். அவற்றிலிருந்து..
-தமிழில்/குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
போலிப் புனைவுகளைப் பரப்புவதே காங்கிரசின் சதித்திட்டம்
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்த நாடாளுமன்றம், இந்த உயர்வான அவை, அர்த்தமுள்ள வாதம் விவாதம் உரையாடல்களுக்கானது. இந்த கருத்தாய்வுகளிலிருந்து, அமுதினை வெளியெடுத்து நாட்டுமக்களுக்கு அளிக்கப்பதற்கான, இது தேசத்தின் மிகப்பெரிய மேடையாக கருதப்படுகிறது. ஆனால், நான் இங்கே, பல மூத்த தலைவர்களின் உரைகளைக் கேட்ட பொழுது, கடந்த இரண்டு நாட்களாக, எனக்கு மட்டுமல்ல, நாடு முழுவதற்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.
இங்கே என்ன கூறப்பட்டது? தேசத்தின் வரலாற்றிலேயே அரசியல் சட்டத்தைக் காப்பதற்கு, முதல் தேர்தல் என்பதே முக்கியமான கருப்பொருளாம். நான் சற்று, அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இப்போதும் கூட இந்தப் போலிப் புனைவைக் கட்டமைப்பீர்களா? நீங்கள் என்ன மறந்து விட்டீர்களா? 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலை? செய்தித்தாள்களுக்குத் தடை வானொலிக்குத் தடை. பேச்சுரிமைக்கும் தடை.
ஒரே ஒரு பிரச்சனைக்காக நாட்டுமக்கள் வாக்களித்தார்கள். ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டி மக்கள் வாக்களித்தார்கள், அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற உலகெங்கிலும், இதை விடப் பெரிய தேர்தல் இதுவரை நடந்ததேயில்லை. மேலும் பாரத நாட்டவரின் நாடிநரம்புகளில் ஜனநாயகம் எத்தனை உயிர்ப்போடு இருக்கிறது, இதை 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆனால் நீங்கள் தேசத்தை ஏமாற்ற நினைக்கிறீர்களா?
அரசியல் சட்டத்தை நிலைநிறுத்திய மிகப்பெரிய தேர்தல், அது தான் என்று நான் கருதுகிறேன். மேலும் அப்போது, தேசத்தின் விவேகம் நிறைந்தவர்கள், அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற, அப்போது ஆட்சியில் இருந்தவர்களை வேரடி மண்ணோடு கிள்ளி எறிந்தார்கள். மேலும் இந்த முறை, அரசியல் சட்டத்தைக் காப்பாற்றும் தேர்தல் என்றால், அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற, எங்களையே உகந்தவர்கள் என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
அரசியல் சட்டத்தை நாங்கள் காப்பாற்றுவோம் என்று எங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. சரி தான், அரசியல் சட்டத்தை யாராலாவது காக்க முடியும் என்றால், இவர்களால் தான் அது முடியுமென்று, நாட்டு மக்கள் எங்களுக்கு அங்கீகாரத்தை அளித்திருக்கிறார்கள்.
நம்பிக்கைதரும் அரசியலுக்கு வெற்றித் திருமகளை உரித்தாக்கிய மக்கள்
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, பத்து ஆண்டுகளாக, தடையில்லாத ஒருமுனைப்பான தொடர்ச்சியான, சேவை…. உணர்வுடன் செய்யப்பட்ட செயலினுக்கு, தேசத்தின் மக்கள், உளமார்ந்த ஆதரவை நல்கியிருக்கின்றார்கள். தேசத்தின் மக்கள், நல்லாசிகளை வழங்கியிருக்கின்றார்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்தத் தேர்தலிலே, தேசத்தின் மக்களின் புத்திசாலித்தனத்தின் மீது பெருமை ஏற்படுகிறது. ஏனென்றால் அவர்கள், பொய்ப்பிரச்சாரத்தைத் தோற்கடித்திருக்கிறார்கள். தேசத்தின் மக்கள், செயல்திறனிற்கு முதன்மை அளித்திருக்கின்றார்கள்.
பொய் பிம்பத்தைக் கட்டமைக்கும் அரசியலை, தேசத்தின் மக்கள் மறுதலித்திருக்கிறார்கள். மேலும், நம்பிக்கை தரும் அரசியலுக்கு, வெற்றித் திருமகளை உரித்தாக்கியிருக்கிறார்கள்.
பிரதமரை விட உயர்ந்த நிலையில் சிலரை வைத்து மன்மோஹன் சிங் அவர்களை அவமானம் செய்த காங்கிரஸ்
கடந்த அரசாங்கத்திலே, பத்தாண்டுகள், அமைச்சரவையிலே இருந்தவர் நம் கட்கே அவர்கள். என்ன நடந்தது? பிரதம மந்திரி……….. அரசியலமைப்புச்சட்டப் பதவி. பிரதம மந்திரியின் பதவிக்கு மேலே, தேசிய ஆலோசனைக் குழு அமர்வது, இது எந்த அரசியலமைப்புச்சட்ட முறையிலே இருக்கிறது? எந்த அரசியல்சட்டத்திலிருந்து இதை நீங்கள் ஏற்படுத்தினீர்கள்?
நீங்கள் தேசத்தின் பிரதம மந்திரி பதவியின் கண்ணியத்தினை, தவிடுபொடியாக்கியிருந்தீர்கள். மேலும், ரிமோட் பைலட்டாகச் செயல்பட்டு, நீங்கள் அவர் தோளிலேறி சவாரி செய்தீர்கள். எந்த அரசியல் சட்டம் உங்களுக்கு அனுமதி வழங்கியது? மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, எங்களுக்கு உண்மையை உரைக்க வேண்டும். எந்த அரசியல்சட்டத்தின் அடிப்படையிலே, ஒரு அவையினுடைய, அமைச்சரவையின் தீர்மானத்தை, பொதுப்படையாக, கிழிக்கின்ற உரிமையை அளிக்கிறது கூறுங்கள்? அது எந்த அரசியலமைப்புச் சட்டம்? எதனடிப்படையில் கிழிக்கப்பட்டது?
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, நம்முடைய தேசத்திலே, எழுத்துவடிவிலே மரபுச்சீர்முறை இருக்கிறது. குடியரசுத்தலைவர் உபகுடியரசுத்தலைவர் பிரதம மந்திரி அவைத்தலைவர், என ஒரு கிரமம் உண்டு.
யாராவது எனக்குச் சொல்லுங்கள். இந்த அரசியல்சட்டத்தின் மாட்சிமையைச் சுக்குநூறாகத் தகர்த்து, மரபுச்சீர்முறையிலே, ஒரு குடும்பத்திற்கு முதன்மை எப்படி அளிக்கப்பட்டது… அது என்ன அரசியலமைப்புச் சட்டம்? அரசியலமைப்புச் சட்டப் பதவிகளை வகித்தவர்கள் பின்னிலையிலா?
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னிலையா? அரசியல்சட்டத்திற்கு எந்த மாதிரியான மரியாதையை நீங்கள் அளித்தீர்கள்?