October 15, 2024, 3:27 AM
25 C
Chennai

ரயில் கவிழ்ப்பு முயற்சி பயங்கரவாதச் செயலே: தடுக்க தனி சட்டம் தேவை!

gas cylinder in railway line near kanpur

பாரதத்தில் அண்மைக் காலமாக ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் அதிகரித்திருப்பது கவலை தரத்தக்க ஒன்று.  இது குறிப்பாக, குறி வைத்துத் தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதச் செயல்களாக வெளிப்படுவது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை வெளிக்காட்டுகிறது.   இவ்வாறு எண்ணுவதற்கு  காரணங்கள் இல்லாமல் இல்லை. 

கடந்த 3 மாதங்களில் ரயில்களைக் கவிழ்க்கும் முயற்சிகள் அதிகரித்து வருவதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை 18 முறை ரயிலைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடந்துள்ளதாகவும், ரயில்களைக் கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர்கள், சைக்கிள்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் சிமென்ட் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் மட்டும் 15 முறையும், செப்டம்பர் மாதம் முதல் பத்து நாட்களில் இதுவரை 3 முறையும் ரயிலைக் கவழ்க்க முயற்சிகள் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் அதிகம் என்பது தெரியவந்துள்ளதால், இதன் பின்னணியில் எத்தகைய சதி வேலைகள், சதிவலைப் பின்னல்கள் உள்ளன என்பதைக் கண்டறிய வேண்டிய பொறுப்பும் பணியும் உளவுத் துறைகளுக்கு ஏற்பட்டுள்ளன. உ.பி.க்கு அடுத்த படியாக,  பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ம.பி.,ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் நடந்துள்ளன. குறிப்பாக, நாட்டின் வட மாநிலங்களில் இத்தகைய முயற்சிகள் நடப்பது, மிகப் பெரும் கவலைகளை நாட்டில் ஏற்படுத்தியுள்ளன.  

கடந்த ஆகஸ்ட் மாதம் சபர்மதி ரயில், கான்பூர் அருகே தண்டவாளத்தின் மீது வைக்கப்பட்ட பாறாங்கற்களைப் போன்ற கனமான பொருளின் மீது மோதியதில் 22 பெட்டிகள் தடம்புரண்டன. அதிர்ஷ்டவசமாக இதில் பயணிகள் எவரது உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சிலர் லேசான காயங்களுடன் தேறினர். 

இது நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், தற்போது கான்பூரில் மீண்டும் பயணிகள் செல்லும்  ரயிலை கவிழ்க்கும் நோக்கில், தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன் தினம், அதே கான்பூர் பகுதியில் தற்போது தண்டவாளத்தில் காஸ் சிலிண்டருடன், பெட்ரோல் கேன்கள், தீப்பெட்டிகள் இவற்றுடன் அபாயகரமான பொருள்களும் வைக்கப்பட்டு ரயிலைக் கவிழ்க்கவும் பெரும் விபத்து ஏற்படச் செய்யவும் முயற்சி நடந்துள்ளது. 

உ.பி.,யின் பிரயாக்ராஜில் இருந்து ஹரியானாவின் பிவானிக்கு, காலிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு, வேகமாக சென்று கொண்டுஇருந்தது. கான்பூருக்கு அருகே, சிவ்ராஜ்பூர் என்ற இடத்திற்கு வந்த போது, ரயிலின் ஓட்டுநர் தீவிரக் கண்காணிப்புடன் ரயிலை இயக்கியபோது, ரயில் பாதையில் கேஸ் சிலிண்டர் உள்பட சில பொருள்களை கண்டு அதிர்ச்சி அடைந்து. சமயோசிதமாக செயல்பட்டு ரயிலை உடனடி பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். இதனால் வேகமாக வந்து மோதி அதனால் ஏற்படும் மிகப்பெரும் விபத்தும் சேதமும்  தவிர்க்கப்பட்டுள்ளது.  உடனடி பிரேக் மூலம்  ரயில் மெதுவாக வந்து தண்டவாளத்தில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் மீது ரயில் இன்ஜின் மோதியது. இதில் காஸ் சிலிண்டர் துாக்கி வீசப்பட்டது. சிலிண்டர் வெடிக்காததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிலிண்டர் மீது லேசாக இடித்து கீழே தள்ளியதால்  பெரு விபத்து ஏற்படாமல் காக்கப