
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் கடந்த மகர சங்கராந்தியான ஜன.13ம் தேதி தொடங்கிய மஹா கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்று, மகா சிவராத்திரியான பிப்.26 இன்று நிறைவு பெறுகிறது. இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு நீராடி இருக்கின்றனர்.
உ.பி. மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மகா கும்பமேளா நிறைவு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மகர சங்கராந்தியான கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடினர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் வந்திருந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
பொது மக்கள், பக்தர்களுடன் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதுவரை 63 கோடி பேருக்கும் மேல் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநில சிறைக்கைதிகளும் புனித நீராட வசதியாக, திரிவேணி சங்கம புனிதநீர் மத்திய சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 44 நாட்களாக நடந்து வந்த மகா கும்பமேளா, 45-வது நாள் மகா சிவராத்திரி தினமான இன்றுடன் நிறைவுபெறுவதையொட்டி, நிறைவு நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. கங்கைக் கரையில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன.
நிறைவு நாளை முன்னிட்டு நேற்று முதலே லட்சக் கணக்கானோர் பிரயாக்ராஜ் நோக்கி செல்லத் தொடங்கினர். மகா சிவராத்திரி மற்றும் மகா கும்பமேளா நிறைவுநாளான இன்று ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில்,முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதே நேரம், அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவர்கள், காவலர்கள், நிர்வாக அதிகாரிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் பகுதியில் எந்த இடத்தில் மக்கள் வருகின்றனரோ, அதன் அருகிலேயே நீராட வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
முன்னதாக, கும்பமேளாவில் நதி நீர் குளிக்கக் கூட லாயக்கில்லாத வகையில் அசுத்தம் அடைந்ததாக எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுக்கு உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் பதில் அளித்தார். அப்போது அவர், கழுகுகள் அங்கே பிணங்களை பார்த்தன, பன்றிகள் அழுக்கை பார்த்தன, நம்பிக்கை கொண்டோர் ஒழுங்கைப் பார்த்தார்கள், பக்தர்கள் அங்கே கடவுளைப் பார்த்தார்கள் என்று கூறினார்.
சனாதன தர்மம், கங்கை மாதா, இந்தியா அல்லது மகா கும்பமேளா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைப்பதும், போலி காணொளிகளை பகிர்வதும் 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதற்கு சமம் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.