இந்துப் பெண்கள் 5 குழந்தைகளைப் பெற வேண்டும்: பாஜக தலைவர் ஷியாமல் கோஸ்வாமி

இந்தியா

goswami கொல்கத்தா, ஜன.13: இந்துப் பெண்கள் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஷியாமல் கோஸ்வாமி பேசியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிர்பும் மாவட்ட பாஜக துணை தலைவர் ஷியாமல் கோஸ்வாமி. அவர் திங்கட்கிழமை பிர்பும் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்து மதத்தைச் சேர்ந்த தாய்மார்கள் 5 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் வருங்காலத்தில் இந்தியாவில் இந்துக்கள் இருக்க மாட்டார்கள். இந்துத்துவத்தையும், சனாதன தர்மத்தையும் பாதுகாக்க அனைத்து இந்துப் பெண்களும் 5 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். முன்பு, பாஜக.வைச் சேர்ந்த எம்.பி. சாக்ஷி மகராஜ் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் நடந்த கூட்டத்தில், இந்துப் பெண்கள் குறைந்தது 4 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஒரு குழந்தையை ராணுவத்துக்கும், ஒரு குழந்தையை மத குருக்களான எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது பரவலாக சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் ஷியாமல் கோஸ்வாமியின் இந்தப் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.