பொங்கல் செலவுக்கு ரூ.10 ஆயிரம் கடன் கேட்டு ஆட்சியரிடம் விவசாயி மனு

தமிழகம்

தஞ்சாவூர், ஜன.13: பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி, செலவுக்கு பணம் வேண்டும் என்று ரூ.10 ஆயிரம் கடனாக வழங்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் மனு கொடுத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கக்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.சுகுமாரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவராகவும் இவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனது வயலில் விளைந்த நெல்லை, கடந்த 8ம் தேதி கக்கரை கிராமத்தில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளார். ஆனால், அதற்கான தொகை ரூ. 44,688 அவரது வங்கியில் வரவு வைக்கப்படவில்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து காசோலை அனுப்ப தாமதம் ஏற்பட்டதால் இதற்கும் தாமதம் ஏற்படுவதாக வங்கியின் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த சுகுமாரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘ஜனவரி 8ம் தேதி நெல் விற்பனை செய்த வகையில் எனக்கு வரவேண்டிய ரூ. 44,688 தொகை இதுவரை கிடைக்காததால், பொங்கல் செலவுக்காக ரூ. 10 ஆயிரம் கடன் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நெல்லுக்கான பணம் வந்ததும் பெறும் பணத்தைத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த மனுவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, சுகுமாரனுக்கு வழங்க வேண்டிய தொகையை பட்டுவாடா செய்யும்படி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.